`பொதுமக்கள் சிரமத்தைப் போக்கவே பஸ்ஸை ஓட்டினேன்’ - அரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்.எல்.ஏ!

தமிழக அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தியும் 13-வது ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திடீரென காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கின்ற ராஜகிருஷ்ணன் அந்தியூர் முதல் பவானி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தைச் சீருடையுடன் இயக்கத் தொடங்கினார். நடத்துநரின் கட்டளைக்கேற்ப ஒவ்வொரு நிறுத்தத்திலும் பயணிகளை ஏற்றி, இறக்கி தேர்ந்த ஓட்டுநரைப்போல் அவர் பேருந்தை இயக்கினார். முதலில் அந்தப் பேருந்தில் ஏறுவதற்கு அஞ்சிய மக்கள், பின்னர் ’நல்லாதானைய்யா வண்டி ஓட்டுறார்’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள். அந்தியூரிலிருந்து பவானி வரை சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் அந்தியூர் வரும்போது, போக்குவரத்துத் தொழிலாளர்கள், எம்.எல்.ஏ ஓட்டி வந்த பேருந்தை நடுவழியிலேயே மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜகிருஷ்ணனிடம் பேசியதற்கு, ''போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் இயங்கவில்லை. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதையடுத்து அந்தியூர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்வதற்காக வந்தேன். அதிகாரிகள் எல்லா வண்டியும் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்றவர்களிடம் ஏன் பவானி பஸ் போகக்கூடிய இடத்தில் மட்டும் மக்கள் கூட்டமாக இருக்கிறார்கள் என்று கேட்டேன். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பவானி பேருந்தை இயக்குவதற்கு ஆள் இல்லை என்றார்கள். நான் ஏற்கெனவே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கி வைத்திருப்பதோடு, பேருந்தை இயக்குவதில் எனக்கு நல்ல அனுபவமும் இருக்கிறது. அதையடுத்து போக்குவரத்து அதிகாரிகளிடம் என்னுடைய கனரக வாகன உரிமத்தைக் காட்டி அவர்கள் முன்பு இயக்கிக் காண்பித்துவிட்டு அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு, பவானி பேருந்தில் டிரைவராக அமர்ந்து பேருந்தை இயக்கினேன். தொழிலாளர்களின் உரிமையை எந்தவிதத்திலும் சிறுமைப்படுத்துவது என்னுடைய நோக்கமில்லை. பொதுமக்கள் சிரமத்தைக் கருத்தில்கொண்டே பேருந்தை ஓட்டினேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!