வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/01/2018)

கடைசி தொடர்பு:12:43 (04/07/2018)

20 ரூபாய் டிக்கெட், இப்போ 70 ரூபாய்! தனியார் பேருந்துகளுக்கு எதிராகக் கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்


அறந்தாங்கியிலிருந்து, புதுக்கோட்டைக்கு  20 ரூபாய்க்குp பதிலாக 70 ரூபாயும், திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு 33 ரூபாய்க்கு பதிலாக 66 ரூபாயும் தனியார் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நேற்று மாலை ஆறு மணிக்கு மேல் தமிழ்நாடு முழுக்க அரசுப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், உடனடியாக 2 முதல் 3 மடங்கு கூடுதல் கட்டணத்தைப் பயணிகளிடமிருந்து வசூலிக்கும்படி தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். 'தாங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தைக் கொடுக்கும் பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும், மீறி பிரச்னை பண்ணுகிற பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டுச் செல்லுங்கள் என்றும் பேருந்து உரிமையாளர்கள் உத்தரவிட்டிருக்கின்றனர். இந்தக் கட்டணக் கொள்ளை நேற்றிரவிலிருந்து இப்போதுவரை தொடர்வதால், பயணிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். "என்னங்க பெரிய அநியாயமாவும் அக்கிரமுமாவும் இருக்கு. புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கிக்கு சாதாரண பேருந்து 15 ரூபாயும், விரைவுப் பேருந்துகளில் 20 ரூபாயும்தான் கட்டணம். இவுங்க என்னடான்னா, 70 ரூபாய் கேக்கறாங்க. திருச்சிக்கு 33 ரூபாய்தான் கட்டணம். ஆனா, 66 ரூபாய் கேக்கறாங்க. நியாத்தைக்கேட்டா, 'இஷ்டம்னா வா. இல்லேன்னா பொடிநடையா நடந்து ஊருக்குப் போ'னு சொல்றானுங்க. அரசாங்கம் பஸ் விடாம எங்களைச் சாகடிக்குது. தனியார் பேருந்துக்காரங்க, அநியாயமா காசு வசூலிக்கிறாங்க. இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லையா?’’ என்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் ஆத்திரத்துடன் பொங்கித்தீர்த்தார்கள். இதுதவிர, அன்னவாசல், ஆலங்குடி, பொன்னமராவதி, கொத்தமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததால், பேருந்தின் மேற்கூரையிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்துகள் விரைந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அதிக கிராமங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் இணைப்புப் பாலமாக இருப்பது இந்தத் தனியார் பேருந்துகள்தாம். அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அணுகுமுறை இப்படி அடியோடு மாறியிருப்பது புதுக்கோட்டை மாவட்ட மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.