வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/01/2018)

கடைசி தொடர்பு:08:03 (06/01/2018)

பிரச்னை தீரும்வரை வேலைநிறுத்தம் தொடரும்! போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொழிலாளர்களின் பிரச்னைகள் தீரும்வரை போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிடில், பணி நிக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது. 

இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் துறை. இதனால், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாத ஊழியர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இந்த நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள், ‘நீதிமன்ற உத்தரவை சட்டப்படி சந்திப்போம். எங்களுடைய பிரச்னைகள் தீரும்வரை போராட்டம் தொடரும். இதுதொடர்பான வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும்போது எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம்’ என்று அறிவித்தனர்.