எம்.எல்.ஏ-வுடன் மூன்றாவது நாளாகச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள குமரி மக்கள்!

'ஒகி' புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இம்மாவட்டத்தில் அடங்கிய புலியூர் குறிச்சியில் மூன்றாவது நாளாக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். 

பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய 'ஒகி' புயலால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துத்தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வுசெய்தனர். என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரண உதவிகள், இழப்பீடுகள் முறையாக வழங்கப்படவில்லை. அதனால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் பத்பநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் பங்கேற்றுள்ளார். 

பல நூறு ஏக்கர் பரப்பளவிலான ரப்பர், வாழைப் பயிர்கள், 200-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இழப்பு, ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் அவற்றை இழந்து நிற்கும் மக்கள், புயலால் பாதிக்கப்பட்டவர்கள், "குமரியை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; இழப்பீடுகளை நேர்மையாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்து அதற்கேற்ப நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்; வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாக 4000 ரூபாய் கொடுத்து மக்களை இழிவுபடுத்தாமல், சேதத்தை தற்போதைய விலைவாசிக்கேற்ப கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

 

ரப்பருக்கு 10,000 ருபாயும், தென்னைக்கு 4,000 ருபாயும், தேக்கு, அயனி, பலா போன்றவற்றிற்கு 10,000 ரூபாயும் கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட பயிர்களின் வாழ்நாள் மற்றும் வருமானம் ஈட்டும் தன்மையையும் கணக்கில்கொண்டு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தவிர, புயலுக்குப் பின் வீடு திரும்பாத மீனவர்களை இறந்தவர்களாகக் கருதி, அவர்களின் குடும்பங்களுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

ஒகி புயல் போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் வகையிலும், அதுதொடர்பான முன்னறிவிப்புகளை நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் வழங்கவும் மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்டக்காரர்கள், தங்களின் போராட்டம் தொடரும் என்றும் உறுதிபடக் கூறுகிறார்கள். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் மற்றும் போலீஸார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!