வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/01/2018)

கடைசி தொடர்பு:08:26 (06/01/2018)

விபத்தில் காயமடைந்த உறவினர்களைப் பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாதவரை பார்க்கச் சென்றவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                     

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சவேரியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு காரில் ஆரோக்கியமேரி மகள் அனிதாரோஸ், அவரது உறவினர் ஷோபியா மற்றும் சவரிமுத்து ஆகியோர் தா.பழுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். கீழ மைக்கேல்பட்டி அருகில் வந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழிவிட ஒதுக்கியபோது கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சவரிமுத்து, ஆரோக்கியமேரி, அனிதாரோஸ், ஷோபியா ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் காரை ஓட்டிவந்த பெஞ்சமின் பிராங்க்ளின் காயமின்றி தப்பினார். காயமடைந்த 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தா.பழுர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார். இந்த விபத்து பற்றி  தகவல் கிடைத்ததும் சவரிமுத்துவின் உறவினர் மார்ட்டீன் பைக்கில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தார். உத்திரக்குடி அருகே வந்தபோது ஸ்பீடு பீரேக்கரை கவனிக்காமல் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மார்ட்டின் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.