வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (05/01/2018)

கடைசி தொடர்பு:23:30 (05/01/2018)

உரிமம் காலாவதியான டாஸ்மாக் பார்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட கலால்துறை அதிகாரி!

உரிமம் இல்லாத டாஸ்மாக் பாரில் லஞ்சம் வாங்கிய மண்டல கலால் வரித்துறை அதிகாரி மற்றும் வருவாய் அலுவலர் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

லஞ்சம்

கோவை சாய்பாபாகாலணி பகுதியில் உரிமம் இல்லாமல் டாஸ்மாக் பார் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை கோவை மண்டல கலால் வரித்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் வருவாய் அலுவலர் செந்தில்குமார் அந்த பாரில் ஆய்வு செய்வதாகக்கூறி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர். அப்போது, ரகசியத் தகவல் கிடைத்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் பார் உரிமம் காலாவதியான நிலையில், கோவை மாநகரில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களில் இவர்கள் வசூலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 29 கடைகளிலும், இன்று 11 கடைகளிலும் லஞ்சம் வசூலித்துள்ளனர். அவர்கள் இருவரிடமிருந்தும் 95 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் டாஸ்மாக் பார் சென்ற ஓலா கேப் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.