போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு பெற்ற வழக்கு- திருப்பூர் நீதிமன்றத்தில் ரூபேஷ், சைனா ஆஜர்! | Maoist couple appears before Tiruppur court

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (06/01/2018)

கடைசி தொடர்பு:00:30 (06/01/2018)

போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு பெற்ற வழக்கு- திருப்பூர் நீதிமன்றத்தில் ரூபேஷ், சைனா ஆஜர்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு பெற்ற வழக்கில், மாவோயிஸ்ட் தம்பதியர் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் மற்றும் அவரது மனைவி சைனா உள்ளிட்ட 5 பேரை, கடந்த 2015-ம் ஆண்டு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வைத்து கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தம்பதியர் ரூபேஷ் மற்றும் சைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது, செல்போன் சிம்கார்டு வாங்குவதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், அவர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த பவுதிகாபேகம் என்பவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக, ரூபேஷ் மற்றும் சைனா மீது திருப்பூர் போலீஸார், மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது போலி ஆவணங்களைக் கொண்டு சிம்கார்டு பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி, அவர்களிடம் தெரிவித்தார். பின்னர், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 31-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்ததையடுத்து, தம்பதியர் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்று அடைக்கப்பட்டனர்.


[X] Close

[X] Close