சேலத்தில் விஜயகாந்த் விழாவுக்கு அனுமதி மறுப்பு!

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 10-ம் தேதி பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு தாரமங்கலம் காவல்துறையிடம் அனுமதி கேட்டதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்கள். அதையடுத்து தே.மு.தி.க. கழக உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இது பற்றி தே.மு.தி.க., உயர்மட்டக் குழு உறுப்பினரும், சேலம் புற நகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் கூறும்போது, ''தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் விஜயகாந்த் ஜாதி மத பேதமின்றி அனைத்து பண்டிகைகளுக்கும் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.  குறிப்பாக  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட  உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வருகின்ற 10-ம் தேதி பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கி கொண்டாட திட்டமிடப்பட்டு தாரமங்கலம் காவல் ஆய்வாளரிடம்  அனுமதி கடிதம் கொடுத்தோம். ஆனால் காவல் ஆய்வாளர், விஜயகாந்த் சேலத்தில் விழா நடத்தினால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளார்.

உண்மையான காரணம் அது அல்ல. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால்  எதிர்க்ட்சிகள் வருவதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுக்கப்படுகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பளரிடம் அனுமதி வழங்கக்கோரி மனு அளித்துள்ளோம். அதன் பிறகும் அனுமதி மறுக்கப்பட்டால் ஒருங்கிணைந்த மாவட்ட தொண்டர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம். மேலும் அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறுவோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!