வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (06/01/2018)

கடைசி தொடர்பு:08:59 (06/01/2018)

மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் தர அலைக்கழிப்பு - கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு பெற்றோர் மனு

Kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்குட்பட்ட வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆறுமுக ரெட்டியார். மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளியான இவருக்கு  2 மகன்கள். மூத்த மகன் சிவமுருகன் ராஜஸ்தானில் பணியாற்றிவருகிறார். 2-வது மகன் ராமகிருஷ்ணன். திருமணமான இவர், மனைவி குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்துவருகின்றார். ராமகிருஷ்ணன் அமெரிக்கக் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வதற்கு, அவருக்கு பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில், ஆறுமுக ரெட்டியார் பிறப்பைப் பதிவுசெய்யவில்லை. 

தன் மகனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு,  கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுலகத்தில் விண்ணப்பம் செய்தார். இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், எட்டயபுரம் தாசில்தார் என அனைவரும் விசாரணை நடத்தி பிறப்புச்சான்றிதழ் கொடுக்க எவ்விதத் தடையும் இல்லை என்று சான்றளித்துள்ளனராம். 

ஆனால், இதுவரை கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, அனைத்து சான்றிதழ்களின் நகலைக் கொடுத்த பிறகும் பிறப்புச் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பதால், மகன் ராமகிருஷ்ணனுக்கு குடியுரிமை கிடைக்காத நிலை உள்ளது.

Protest in kovilpatti rdo office

தற்போது அமெரிக்காவில் விசா வழங்குவதில் அதிகக் கெடுபிடி உள்ளதால், மகனுக்கு வேலைபோய்விடும் அபாயம் உள்ளது. அப்படி நிகழ்ந்தால், தன்னுடைய மகன் மற்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, விரைந்து பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும், இல்லையெனில், சான்றிதழ் வழங்க மறுப்பதற்கான உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். எதுவும் கூறாமல் அலைக்கழிப்பதைவிட, நாங்கள் கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என  ஆறுமுக ரெட்டியார் மற்றும் அவரது மனைவி சிந்தாமணி ஆகியோர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுக்கு ஆதரவாக,  தங்களது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு கடந்த 8 வாரங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ள கீழ்நாட்டுக்குறிச்சியைச் சேர்ந்த சண்முகவேல், மேலக்கரந்தையைச் சேர்ந்த சுப்புராஜ் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், தங்களது கோரிக்கை அடங்கிய மனுவையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க