வெளியிடப்பட்ட நேரம்: 01:37 (06/01/2018)

கடைசி தொடர்பு:11:01 (06/01/2018)

`எங்கள் பணம் ரூ.7,000 கோடியைத் தமிழக அரசு மோசடி செய்துவிட்டது!' போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை ஆகிய ஊர்களில் பஸ் டெப்போக்கள் மூலம் 320 பஸ்கள் இயங்கிவருகின்றன. இதில், முக்கால்வாசி பஸ்கள் நேற்று இயங்கவில்லை. இதனால், தனியார் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள், மினி பஸ்களில் எல்லாம் டிக்கெட் விலையை கண்டபடி உயர்த்திவிட்டார்கள். எப்படியோ ஊர்போய் சேர்ந்தால் போதும் என்று பொதுமக்களும் அதிக பணம் கொடுத்து பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களிடம் பேசினோம். "கடந்த ஒன்றரை வருடத்தில் 22 முறை தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். எதுவுமே முடிவுக்கு வரவில்லை. மின்வாரியத்துறை ரூ.65 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. ஆனால், ஊதிய உயர்வைச் சரியாக வழங்கிவருகிறது. அங்கு பணிபுரியும் டிரைவரும் நாங்களும் ஒரே ரேங்க்தான். ஆனால், நாங்கள் மட்டும் அவர்களைவிடக் குறைவாக ஊதியம் வாங்குகிறோம்.

இதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியும். நாங்கள் வாங்கிய கடன், இன்ஷூரன்ஸ், தொழிலாளர் நிதிக்காக பிடிக்கப்பட்ட பணம் மட்டும் 7ஆயிரம் கோடி ரூபாய். இதை, அரசாங்கம் மோசடிசெய்திருக்கிறது. இரவு பகலாக கண்விழித்து, பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்க்கிறோம். வருமானம் தராத சேவைத் துறைகளுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அரசு, எங்களுக்கு வழங்குவதில் என்ன சிரமம் இருக்கிறது. ஓய்வுபெற்றவர்களின் பணிக்கொடையைக்கூட கொடுக்காமல், கனத்த இதயத்தோடுதான் அனுப்பிவைக்கிறார்கள். எங்கள் உழைப்பில் பிடித்தம்செய்த பணத்தை நீதிமன்றம் சென்றுதான் வாங்கவேண்டியது இருக்கிறது என்றார்கள் சோகத்தோடு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க