வங்கித் தேர்வில் அசத்திய கோவை பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகள்!

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐ.பி.பி.எஸ் வங்கித் தேர்வில், கோவையைச் சேர்ந்த 12  பார்வைக்குறையுடைய மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள்

வங்கி, இன்ஷூரன்ஸ், மத்திய மற்றும் மாநில அரசுப் பணித் தேர்வுகளைப்  பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்வதற்காக, கோவையைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மற்றும் தேசிய பார்வைக்குறையுடையோர் இணையம் இணைந்து, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகின்றனர்.

 கடந்த டிசம்பர் மாதம், வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில், இந்த மையத்தில் பயின்ற 12 பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியும், லூயி ப்ரெய்லியின் பிறந்தநாள் கொண்டாட்டமும் கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,  பார்வைக்குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவர்கள் பட்டிமன்றம், குறு நாடகம் மற்றும் கவிதை வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதுகுறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்துமதி கூறுகையில், " 2009-ம் ஆண்டு முதல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக  பார்வைக்குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்துவருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த மையத்தில் படித்த 21 பேர் பல்வேறு பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள். தற்போது, தேர்ச்சிபெற்றுள்ள 12 பேருக்கும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!