வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (06/01/2018)

கடைசி தொடர்பு:07:45 (06/01/2018)

வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு ஆதரவளிப்போம்! மக்கள் அதிகாரம் அமைப்பு அழைப்பு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் என்று அறிவித்துள்ள, மக்கள் அதிகாரம்  மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தன்னுடைய அறிக்கையில், "போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், செய்த வேலைக்கு உரிய ஊதியம் கேட்கிறார்கள். இது அவர்களின் உரிமை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு கேட்காமலேயே பலமடங்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதற்குக் காரணம், அரசின் ஊழலும், நிர்வாக முறைகேடுகளும்தான். ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை,  சம்பளத்தில் பிடித்தம்செய்தது, ஓய்வூதிய பங்களிப்புத் தொகை, கூட்டுறவு நிறுவனங்களுக்காகப் பிடித்தது, அனைத்தையும் சேர்த்தால் சுமார் 7,000 கோடி ரூபாய் வரும். அவர்களுக்குச் சேரவேண்டிய பணத்தைத்தான் கேட்கிறார்கள். நியாயமான ஊதிய உயர்வு, அவர்களுக்குச் சேரவேண்டிய ஓய்வூதியப் பயன் அனைத்தும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பிறகும், இன்று வரை அமல்படுத்தாத தமிழக அரசுதான் குற்றவாளி. 

வாழ்வுரிமை போராட்டம்

வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென நடத்தப்படவில்லை. கோரிக்கைகளை விளக்கி பிரசுரம் அச்சடித்து மக்களிடம் கொடுத்துள்ளார்கள். வாயில் கூட்டம், ஒருவார காலம் காத்திருப்புப் போராட்டம் என நடத்தினார்கள். 

அரசு போக்குவரத்துக் கழகமே தொழிலாளிகள் பணத்தில்தான் இயங்கிவருகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, துரோகத்தாலும், போலீஸ் அடக்குமுறையாலும்  போராட்டத்தை வீழ்த்த நினைக்கிறது ஆளும்கட்சி. உயர் நீதிமன்றமும் இதற்குத் துணைபோகிறது. இதை பொதுமக்கள் அனுமதிக்க  கூடாது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க