வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (06/01/2018)

கடைசி தொடர்பு:10:59 (06/01/2018)

விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!

விபத்தில் சிக்கியவரை உரிய நேரத்திக் காப்பாற்றிய தஞ்சை அம்மாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனிதநேயம் பலரை நெகிழ வைத்துள்ளது. 

முன்பெல்லாம், சாலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு யாரேனும் பாதிக்கப்பட்டுக் கிடந்தால், அங்குள்ள பொதுமக்கள் பதறிப்போய் அவசர உதவிகள் செய்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வார்கள். தற்போது, அதுபோன்ற மனிதநேய உதவிகளைப் பார்ப்பதென்பது அரிதாகிவிட்டது. இது, 'அவசர யுகம்' என்ற பெயரில் பொதுமக்கள் பெரும்பாலும் அச்சச்சோ என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டுக் கடந்துசெல்லும் காலம் இது. இரக்க குணம் கொண்டவர்களாக இருந்தால், அதிக பட்சம் 108 அவசர எண்ணுக்கு போன்  பண்ணிவிட்டுக் காத்திருப்பார்கள். என்னதான் ஆபத்தான நிலையில் கிடந்தாலும், 108 வந்தால்தான் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் செல்ல முடியும்.

 

இந்நிலையில்தான், தஞ்சை அம்மாப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனிதநேயம் நெகிழவைக்கிறது. உடையார்கோவிலில் உள்ள தஞ்சை பிரதான சாலையில், பூபதியம்மாள் என்ற விவசாய கூலித் தொழிலாளி, பேருந்தில் அடிபட்டு ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார். பேருந்தின் டயர்கள் ஏறியதில், கால்கள் நசுங்கி ரத்தக்களறியாகிக் கிடந்திருக்கிறார் பூபதியம்மாள். அங்கு கூடியிருந்தவர்கள், தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டு, 108-க்கு போன் செய்துவிட்டு காத்திருந்திருக்கிறார்கள். வலியால் துடித்திருக்கிறார் பூபதியம்மாள். கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணித்த பலரும்கூட பரிதாபப் பார்வையை மட்டுமே வீசியிருக்கிறார்கள்.  தஞ்சையை நோக்கி தனது காரில் சென்றுகொண்டிருந்த செந்தில்குமார், பதற்றத்தோடு இறங்கி வந்து பூபதியம்மாளைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு போய், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். பூபதியம்மாளின் கணவர், மகன் மட்டுமல்ல, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருமே செந்தில்குமாரின் செயலைக் கண்டு நெகிழ்ச்சியோடு வியக்கிறார்கள்.  செந்தில்குமார், சமீபத்தில்தான் புதிய கார் வாங்கியிருக்கிறார். காருக்குள் ரத்த வெள்ளம். சென்டிமென்ட் என்ற பெயரில் தனது நெஞ்சை கல்லாக்கி கொள்ளவில்லை. பாராட்டு தெரிவிக்க அவரைத் தொடர்புகொண்டபோது, ’வலியால துடிச்சிக்கிட்டு இருந்தாங்க. நான் செஞ்சது ஒரு சாதாரண உதவி' எனத் தன்னடக்கத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.