வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (06/01/2018)

கடைசி தொடர்பு:09:35 (06/01/2018)

உப்பூர் அனல்மின் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா உப்பூர் பகுதியில் அமைய உள்ள அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள உப்பூரில், ரூ.9,600 கோடி மதிப்பில் அனல் மின்நிலையத் திட்டம் அமைய உள்ளது. இந்த மின் நிலையத்தின் மூலம் மொத்தம் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யலாம். இந்தத் திட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள நாகனேந்தல், வளமாவூர் (வடக்கு), வளமாவூர் (தெற்கு), திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய கிராமங்களில் 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.

உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம் 
 

தமிழக அரசும் தமிழக மின்வாரியமும் இணைந்து, ரூ.9,600 கோடியில் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 38 கிராமங்களைச் சேர்ந்த 93,801 பேர் பாதிக்கப்படுவார்கள். இதனால், 38 கிராமங்களைச் சேர்ந்த விளைநிலங்கள், பாசனக் கண்மாய்கள், குடிநீர் ஊருணிகள், வரத்துக் கால்வாய்கள், வடிகால்கள் அத்தனையும் பாழாகிப் போய்விடும். மொத்தத்தில் 52 கண்மாய்களின் நீர் ஆதாரம் வீணாகிவிடும்.1,350 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் எனக் கூறி, தேவிபட்டினத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும்போதே விவசாயிகள் தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால், திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தி.மு.க செயலாளர் தன.மதிவாணன், விவசாயிகள் சங்கத் தலைவர் கருணாநிதி, நாகனேந்தல் விவசாயி வி.திவாகரன் ஆகியோர் தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு,  மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மாவட்ட வருவாய் அதிகாரியான சி.முத்துமாரியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். கோரிக்கை மனுவை அவர்களிடம் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.