வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (06/01/2018)

கடைசி தொடர்பு:16:11 (06/01/2018)

“என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கம்மா?” கருணாநிதி-கனிமொழி பாச அத்தியாயம்

கனிமொழி, kanimozhi

தி.மு.க தலைவர் கருணாநிதியின் செல்லமகள் கனிமொழிக்கு வயது 50. கடந்த ஏழு ஆண்டுகளாக வழக்குகள், விமர்சனங்கள் என சர்ச்சைகள் சூழ்ந்திருந்தவருக்கு, அனைத்துச் சங்கிலிகளும் விடுபட்டுள்ள இந்தப் பிறந்தநாள் ரொம்பவே ஸ்பெஷல். அப்பா கருணாநிதியிடம் ஆசீர்வாதம், அண்ணன் ஸ்டாலின் - அண்ணி துர்காவிடமிருந்து பிறந்தநாள் பரிசு, சி.ஐ.டி காலனியில் தொண்டர்கள் அணிவகுப்பு என சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார் கனிமொழி. தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர் என வலம் வந்துகொண்டிருந்தவர் அவர். ‘கருணாநிதியின் மகள்’ என்ற முகத்தை அவரிடம் அப்போது காண்பது மிகக்கடினம். தன்னை அவ்வாறு முன்னிறுத்திக்கொள்வதையும் தவிர்த்து வந்தார். காலச் சுழற்சியில் காட்டன் புடைவை, டெல்லி அரசியல் என மாறிப்போனவரின் சில அறியப்படாத பக்கங்கள் இவை…

2ஜி வழக்கு, கனிமொழியின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையையும் மாற்றிப்போட்டது. கடந்த ஏழு வருடங்களாக டெல்லியிலேயே அதிக நாள்கள் செலவிட்டார். நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள், பட்ஜெட் கூட்டங்கள் தவிர்த்து எம்.பி-க்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிவிடுவது வழக்கம். ஆனால், 2ஜி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய காரணங்களால் வருடத்திற்கு தொடர்ந்து 8, 9 மாதங்கள் வரை டெல்லியில் தங்கினார் அவர். இது ஒரு பெரும் தனிமையை அவரிடத்தில் உண்டு செய்தது… காரணம் கனிமொழியின் மகன் ஆதித்யா.

கனிமொழிக்கு அவரது மகன் ஆதித்யாதான் உலகம். முழுநேர அரசியல்வாதியாக மாறினாலும், ஆதித்யாவின் அம்மாவாகத்தான் எப்போதும் வலம் வந்தார் கனிமொழி. உதவியாளர்களிடம் மகனைப் பற்றிய தொடர் விசாரிப்புகள் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி மகனுடன் போனில் பேசுவார். கனிமொழியின் டெல்லி நாள்களின்போது மகன் ஆதித்யா பற்றிய எண்ணங்கள் மட்டும்தான் அதிகமாக சூழ்ந்திருந்தன. சென்னையில் படித்துகொண்டிருந்த ஆதித்யாவை, டெல்லி பள்ளிக்கு மாற்றுவதை கனிமொழி விரும்பவில்லை. கனிமொழி 2ஜி வழக்கில் சிக்கும்போது ஆதித்யாவுக்கு 11 வயது.. இன்று டீன்-ஏஜ் முடியும் தருவாயில் இருக்கிறார் ஆதித்யா. மகனின் இந்த முக்கியக் காலக்கட்டத்தில் அவருடன் அதிக நாள்கள் இருக்க முடியாததை நினைத்து இன்றளவும் வருத்தப்படுவார் கனிமொழி. 

kanimozhi, கனிமொழி

தீவிர வாசிப்பாளர். புத்தகப் பிரியை. சென்னையைப் போலவே டெல்லியிலும் பெரிய புத்தக கலெக்‌ஷனை வைத்திருக்கிறார். டெல்லியின் மிகப்பிரபலமான ‘கான் மார்க்கெட்’டுக்கு அடிக்கடி போய்வரும் கனிமொழி, அங்குள்ள ‘பாஹ்ரி சன்ஸ்' புத்தக நிலையத்தின் நிரந்தர வாடிக்கையாளர். வெளியாகும் புதிய ஆங்கில புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்துவிடுவார். தமிழில் வெளியாகும் முக்கிய புத்தகங்கள் இங்கிருந்து டெல்லிக்குப் பறக்கும். “பொன்னியின் செல்வன்” நாவலின் தீவிர ரசிகையான கனிமொழி, டிஜிட்டலில் வெளியான அந்த நாவலை ஒருநாள் முழுக்க தனது டேப்லெட்டில் வைத்து படித்துகொண்டிருந்தாராம்.

விரும்பிப் பார்ப்பது பழைய படங்களைத்தான். கலைஞர் கருணாநிதி - எம்.ஜி.ஆர் காம்போவில் வெளியான படங்கள் அனைத்தும் இவரது மனதுக்கு நெருக்கமானவை. டி.வி.டி, பென்டிரைவ் எனப் பழைய படங்களின் தொகுப்பு இவரிடம் உண்டு. அதுமட்டுமல்லாமல் நண்பர்கள் மற்றும் மகன் ஆதித்யாவுடன் சென்னை சத்யம் தியேட்டரில் படம் பார்ப்பது இவருக்கு பிடிக்கும். அவர்கள் பரிந்துரைக்கும் புதுப்படங்களைப் பார்த்துவிட்டு விவாதிப்பார். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலப் படங்களையும் அதிகம் ரசிப்பார். பழைய ஹிந்தி படங்களை ஆர்வமாகப் பார்க்கும் இவர், நடிகை ஷபனா ஆஸ்மியின் ரசிகை. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் பசுபதி நடிப்பை அதிகம் புகழ்வார். கங்கனா ரனாவத்தின் ‘குயீன்’ படத்தை பார்த்துவிட்டு தன் நண்பர்களிடம் சிலாகித்திருக்கிறார். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசை மிகவும் பிடிக்கும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மரியான்’ படப்பாடல்களை அதிகம் விரும்பியிருக்கிறார். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சிகளில் அறிமுகமான நாட்டுப்புறப் பாடகர்கள் தரும் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாடகர் வேல்முருகன் ‘ஆடுகளம்’ படத்தில் பாடிய ‘ஒத்த சொல்லால..’ பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.

கருணாநிதி அடிக்கடி மேற்கோள்காட்டும் கவிஞர் பாரதிதாசனை விட, கவிஞர் பாரதியாரையே கனிமொழிக்கு அதிகம் பிடிக்கும். ‘எனக்கு பிடித்தது பாரதியைத்தான்’ என தனது வட்டாரத்தில் அவ்வப்போது சொல்வாராம். அரசியலில் நுழைந்ததற்கு பின்பு கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதை முற்றிலும் குறைத்துவிட்டார். ‘தி இந்து’, முரசொலி கட்டுரைகள், சிங்கப்பூர் பத்திரிகை என பத்திரிகையாளராக அவதாரம் எடுத்த கனிமொழி, இனி கிடைப்பது அரிது! முன்பெல்லாம் ஓய்வு நேரத்தில் சில கவிதைக் குறிப்புகளை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கனிமொழி, kanimozhi

சிங்கப்பூரில் இருந்தபோதே சீன உணவுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இவரது சமையலில் பல நேரங்களில் சீன உணவு வகைகள் இருக்கும். விரும்பிச் சாப்பிடுவது மீன் உணவுகள். இறக்குமதி செய்யப்பட்ட குறிப்பிட்ட மீன் வகையை, சீன ஸ்டைலில் ஃப்ரைடு ரைஸாக மாற்றிக் கலக்குவார். நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த உணவு பரிச்சயம்.  

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும்போது, “அரசியல் என வந்ததற்கு பிறகு ஆண் - பெண் என்ற பேதமே இல்லை. ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களும் செய்ய வேண்டும். அந்த அம்சத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் அதிகமாகவே பார்க்க முடிந்தது. ஒரு அரசியல் தலைவராக அவரை மிகவும் பிடிக்கும்”, என்றிருக்கிறார். 

கனிமொழி வளரும்போதே கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். முதல்வர் மகளாக வளர்ந்த கனிமொழிக்கு முதல் அதிர்ச்சி எமெர்ஜென்சி காலகட்டம். பல்வேறு கைதுகள், அடக்குமுறைகள் சிறுமி கனிமொழி மனதில் பதிந்துபோன ஒன்று. “எங்க வீட்டிற்கு வழக்கமாக பூ கொண்டுவந்து கொடுக்கும் நபரைக்கூட கைது செய்தார்கள். யார் வந்தாலும் போலீஸ் விசாரிப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். என்னுடன் விளையாடிய குழந்தைகள் யாரும் என் வீட்டுக்கு வரமாட்டார்கள். இதுமாதிரியான பலச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டேன். அப்பா என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘என்ன ரேங்க் வாங்குற.. எப்படி படிக்குற?’ என்று கேட்கமாட்டார், மாறாக ‘இப்போ என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கமா?’, என்றுதான் கேட்பார்”, என தன் பால்ய கால நினைவுகள் பற்றி பேசுவார் கனிமொழி.

கனிமொழி, தனது 50 வயதில் இரண்டு முக்கிய அத்தியாயங்களை ஏற்றிருக்கிறார். முதலாவதாக ‘கவிஞர்’ கனிமொழி… இரண்டாவது கனிமொழி ‘எம்.பி’, இந்த வரிசையில் இடம்பிடிக்கப்போகும் மூன்றாவது அத்தியாயம் என்ன என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்