வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (06/01/2018)

கடைசி தொடர்பு:12:15 (06/01/2018)

தொடரும் கல்வீச்சு... பேருந்தில் பயணிக்க அச்சப்படும் மக்கள்

தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு இயக்கப்பட்ட பேருந்தின் கண்ணாடி, கல்வீச்சில் உடைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரூந்து சேவை முடங்கியதால் அவதிகுள்ளான யாத்திரைவாசிகள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள், கடந்த 3 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், உத்தரவை மதிக்காவிட்டால், விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று 95 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், அதிகாரிகளின் முயற்சியால் 10 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிலும், குக்கிராமங்களுக்குச் செல்லவேண்டிய பேருந்துகள் முற்றிலும் முடங்கிய நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையே மட்டும் பேருந்துகள் பெயரளவுக்கு இயக்கப்பட்டன. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே தனியார் பேருந்துகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளிலும் சேர்த்து, 10 சதவிகித பேருந்துகளே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ராமேஸ்வரத்துக்கு வந்துள்ள வடமாநில யாத்திரை வாசிகள், ஐயப்ப பக்தர்கள், வெளியூருக்கு பணிக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பேருந்துகள் ஓடாததால் நடைப்பயணமாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த அரசுப் பேருந்துமீது கல்வீசப்பட்டதில், பேருந்தின் பின்புறக் கண்ணாடி உடைந்தது. அதனால், அந்தப் பேருந்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டது. பேருந்துகள்மீது கற்கள் வீசப்படுவதால்  பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, பேருந்துகளை ஓட வைப்பதற்காக மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பேருந்துகளை இயக்கினர். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், தங்கள் பகுதியில் உள்ள பணிமனைகளுக்கு நேரடியாகச் சென்று, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போதோ, ஒன்றிரண்டு அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ-க்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தையோ, போக்குவரத்துப் பணிமனைகளையோ எட்டிப் பார்க்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.