வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (06/01/2018)

கடைசி தொடர்பு:13:05 (06/01/2018)

`உடனே எங்கள் கிளைகளை அணுகவும்' - ஓட்டுநர், நடத்துநர்களைக் கூவி அழைக்கும் அரசு அதிகாரிகள்

`தினக்கூலிக்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை' என திருச்சி போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள போர்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் முன் வைக்கப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்காத தொ.மு.ச மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பாக, தமிழகம் முழுவதும் நேற்றைய முன் தினம் மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்குகின்றனர். இதனால், பேருந்துகளை ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாததால், பணிமனைகளில் பேருந்துகள் முடங்கியுள்ளன.

தினக்கூலி

இந்நிலையில், தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர்,  நடத்துநர்களை நியமித்து, அரசுப் பேருந்துகளை இயக்க நினைக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாக, அரசுப் பேருந்துகளை இயக்க, `தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை' என திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி மண்டல அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, திருச்சியில் உள்ள பல அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளுக்கும் தற்காலிக ஊழியர்களை நியமிக்கத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், போக்குவரத்துப் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் அருகே கும்பல் கும்பலாக நின்றுள்ளனர். அவர்கள், பேருந்துகளை இயக்கும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கும்பலாக நின்றுகொண்டிருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசுப் பேருந்தை இயக்கிவரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை நோக்கி, உங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம். இப்படிப் பேருந்தை இயக்குவது சரியா எனக் கேள்வி எழுப்புவதுடன், வேலை நிறுத்தத்துக்கு ஒத்துழைப்புக்கொடுங்கள் எனக் கெஞ்சிக் கேட்டனர்.

இப்படியான சம்பவங்களால் திருச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க