வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (06/01/2018)

கடைசி தொடர்பு:15:06 (06/01/2018)

`ஃபேஸ்புக்கில் மாணவியோடு பழகிய விபரீதம்!’ - சிறைக்கம்பிகளை எண்ணும் புதுமாப்பிள்ளை

 Face book

ஃபேஸ்புக் மூலம் கல்லூரி மாணவியிடம் அறிமுகமானவர்கள், அவரது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளனர். மாணவி கொடுத்த புகாரின்பேரில், புதுமாப்பிள்ளையை போலீஸார் கைதுசெய்ததோடு, குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடசென்னையைச் சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றம்). 17 வயதாகும் இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துவந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் சௌகார்பேட்டையைச் சேர்ந்த மோனி என்ற வாலிபர், காயத்ரிக்கு அறிமுகமானார். இவர்களது பழக்கம், நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அதன்பிறகு, கணவன் மனைவியாகவே இருவரும் வாழ்ந்துள்ளனர். இந்தக் காதல் ஜோடி, பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில், காயத்ரிக்குத் தெரியாமல் செல்போனில் படம் மற்றும் வீடியோவை எடுத்துள்ளார் மோனி. அந்த வீடியோவைக் காட்டி காயத்ரியை மோனி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், காயத்ரி மனமுடைந்தார். இருப்பினும், மோனியின் மிரட்டலுக்கு அவர் பயந்து, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல மாறினார். 

கடந்த 2016-ம் ஆண்டு, காயத்ரியை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதிக்கு மோனி அழைத்தார். அதற்கு காயத்ரி மறுப்பு தெரிவித்ததும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக வழக்கம் போல மோனி மிரட்டியுள்ளார். அதனால் வேறு வழியின்றி  பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதிக்கு காயத்ரி சென்றுள்ளார். அங்கு, மோனியின் நண்பர் ரவீந்தர் இருந்துள்ளார். அவரைக் கண்டு காயத்ரி அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது, காயத்ரியிடம் ரவீந்தரும் தவறாக நடந்துள்ளார். அப்போதும் காயத்ரியின் நிர்வாணப்படம், வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது. 

 புதுமாப்பிள்ளை ரவீந்தர்சர்மா

இந்தச் சூழ்நிலையில் காயத்ரி, இரண்டு மாதம் கர்ப்பமடைந்தார். அதன்பிறகு, காயத்ரிக்கு நிகழ்ந்த கொடூரம் அவரது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது. உடனே, காயத்ரியின் அப்பா, ரவீந்தர் வீட்டுக்குச் சென்று விவரத்தைச் சொல்லி தன்னுடைய மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அப்போது, ரவீந்தருக்குத் திருமணமாகிவிட்ட தகவல் தெரிந்து, காயத்ரியின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 22.11.2017ல் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், “மோனியும் அவரது நண்பர் ரவீந்தர் ஆகியோர் தன்னுடைய வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டதாக”வும், “அதில் தான் கர்ப்பமடைந்தாக”வும் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வேப்பேரி மகளிர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, வேப்பேரி மகளிர் போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரியிடம் விரிவாக விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு நிகழ்ந்த கொடுமைகளைச் சொல்லியுள்ளார். மேலும், தன்னுடைய ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியதையும் தெரிவித்துள்ளார். அதோடு, கர்ப்பத்தைக் கலைக்க மாத்திரைகளைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்ளுமாறு ரவீந்தரின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, 'இரண்டாவது மனைவியாக இரு' என்று சொல்கின்றனர். மேலும், நிர்வாண போட்டோவை அழிக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் காயத்ரி கண்ணீர்மல்க போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மோனி, ரவீந்தர் ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். இதில் ரவீந்தர் மட்டும் போலீஸிடம் சிக்கினார்.

அவரைக் கைதுசெய்த போலீஸார், குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மோனியை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னைக் கல்லூரி மாணவியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, சமீபத்தில் ரவீந்தர் திருமணம் செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.