வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (06/01/2018)

கடைசி தொடர்பு:13:24 (06/01/2018)

கனிமொழி, ஆ.ராசாவை ஒதுக்கும் ஸ்டாலின்? - 2ஜி விளக்கக் கூட்டத்தை விலக்கி வைத்த மர்மம் #VikatanExclusive

ஆ.ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பையொட்டி அறிவாலயத்தில் பெரும் புகைச்சல் எழுந்திருக்கிறது. ‘ஜனவரி 20-ம் தேதி ஸ்பெக்ட்ரம் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார் ராசா. இதில் இருந்த பல பகுதிகளை நீக்குமாறு உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். தமிழகம் முழுக்க 2ஜி தீர்ப்பு குறித்த விளக்கக் கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டிருந்தார் ராசா. அதற்கும் அறிவாலயம் தடைபோட்டுவிட்டது' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளின்போது(டிசம்பர் 21) 2ஜி வழக்கின் தீர்ப்பை அறிவித்தார் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை' என்ற அறிவிப்பு வந்தபோது, அறிவாலயமே பட்டாசு சத்தத்தில் அதிர்ந்தது. 'எங்கள் மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிட்டது' என அகமகிழ்ந்தனர் உடன்பிறப்புகள். இதையடுத்து, விமான நிலையத்தில் கனிமொழி, ஆ.ராசாவை வரவேற்கத் திரளுமாறு மாநிலம் முழுக்க இருக்கும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம் என விமான நிலையமே திணறியது. “இந்தக் காட்சிகளின் பின்னணியில் நடந்த பல விஷயங்களை செயல் தலைவர் ரசிக்கவில்லை" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர்,

ஸ்டாலின்“வரப் போகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கும் முடிவில் ஸ்டாலின் இருக்கிறார். இதற்கு முந்தைய காலகட்டங்களில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி இணையும்போதெல்லாம் பெருவாரியான வெற்றிகளை ஈட்டியிருக்கிறது. தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ராசா கூறிய சில வார்த்தைகளுக்கு எதிராக, காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்’ என நினைத்தார் ஸ்டாலின். இந்தநேரத்தில், 2ஜி குறித்த ஆ.ராசாவின் புத்தகம் வெளியாவதையும் செயல் தலைவர் ரசிக்கவில்லை. ‘2ஜி சாகா, அன்போல்ட்ஸ்' எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் நாட்டின் மிகப் பெரிய அதிகார அமைப்புகளான உச்ச நீதிமன்றம், சி.ஏ.ஜி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் ராசா. கூடவே, அப்போதைய காங்கிரஸ் ஆட்சி 2ஜி விவகாரத்தைக் கையாண்டவிதம் பற்றியும் கடுமையாக சாடியிருக்கிறார். 

2ஜி குறித்த இந்தப் புத்தகத்தை வெளியிட முக்கியமான பதிப்பகம் ஒன்று மறுத்துவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹர்ஆனந்த் பதிப்பகம் புத்தகத்தை வெளியிட முன்வந்துள்ளது. புத்தகம் வெளியிடும்  நாளுக்கும் முந்திய நாளில் மிகப் பெரிய விருந்து ஒன்றை அளிக்கவும் தலைமையின் ஒப்புதலைக் கோரியிருந்தார் ஆ.ராசா. தலைமையும், ‘புத்தகத்தில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கக் கூடிய பத்திகளை முழுமையாக நீக்கிவிட்டு வெளியிடுங்கள்’ என உறுதியாகக் கூறிவிட்டது. ‘நமது தரப்பை வலுவாகத் தெரிவிக்க இவையெல்லாம் அவசியம்’ என ராசா விளக்கியும், தலைமை ஏற்கவில்லை. இதையடுத்து, புத்தகத்தில் உள்ள பல பத்திகளை நீக்கிவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் தலைமைக்கும் தகவல் சொல்லப்பட்டது. இதனையடுத்து, 2ஜி தீர்ப்பு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே, ‘2ஜி வழக்கால் ஆ.ராசா குடும்பம் மிகுந்த இன்னலுக்கு ஆளானது' எனக் குறிப்பிட்டிருந்தார் மன்மோகன் சிங்.

தி.மு.க தலைமை தயக்கம்காட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது. இதுகுறித்து பேசிய விவாதித்த குடும்ப ஆட்கள், ‘தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்துவிட்டது. இந்தநேரத்தில் புத்தகத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் வந்து கனிமொழிசேரும். புத்தகத்தால் கோபப்பட்டு மேல்முறையீட்டுக்கு சி.பி.ஐ சென்றுவிட்டால், இதையே ஒரு காரணமாக முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஆட்டத்தைத் தொடங்கிவிடும்' என அச்சப்பட்டுள்ளனர். இதற்கு விளக்கமளித்த ஆ.ராசா, 'சைனியின் தீர்ப்புக்கு மறுவார்த்தை பேச முடியாத அளவுக்கு இந்தப் புத்தகத்தில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதைப் படித்துவிட்டால், மேல்முறையீடு குறித்து சி.பி.ஐ யோசிக்கும். அவர்கள் மேல்முறையீட்டுக்குச் சென்ற பிறகு, புத்தகத்தை வெளியிட்டால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து சேரும்' என்றெல்லாம் கூறியிருக்கிறார். இதனை செயல் தலைவர் ஏற்கவில்லை” என்றார் விரிவாக. 

“2ஜி தீர்ப்புக்குப் பிறகு சற்குணபாண்டியன் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவி கனிமொழிக்கு வந்து சேரும் என நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்தது. ‘சமுதாயரீதியாகவும் கனிமொழிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவரைப் பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும்' என சிலர் வலியுறுத்தியபோதும் மௌனம் சாதித்து வருகிறார் ஸ்டாலின். இதைப் புரிந்து கொண்டு, 'மகளிர் அணிச் செயலாளர் பதவியே பெரிது' எனக் கூறிவிட்டார் கனிமொழி. ஸ்டாலின் கோபத்துக்குக் காரணம், விமான நிலையத்தில் நடந்த காட்சிகள்தாம்.

சமுதாயரீதியான கொண்டாட்டமாக விமான நிலைய வரவேற்பை ஆ.ராசாவும் கனிமொழியும் மாற்றிவிட்டதாகத் தலைமைக்குப் புகார் சென்றது. தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் எல்லாம் கருணாநிதி படமும் ஆ.ராசா படமுமே ஆக்கிரமித்திருந்தன. 'உங்களை அவர் எந்த இடத்திலும் முன்னிறுத்தவில்லை' எனச் சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். இதனைக் கேட்டு சிரித்துக் கொண்டே பதிலளித்த ஸ்டாலின், ‘இதையெல்லாம் நான் கடந்து வெகு வருடங்களாகிவிட்டன' என்றார். இதன்பிறகு, தமிழகம் முழுக்க 2ஜி வெற்றித் தீர்ப்பு கூட்டங்களை நடத்த ஆ.ராசா அனுமதி கேட்டிருந்தார். ‘இப்போதைக்குக் கூட்டங்களை நடத்த வேண்டாம்’ எனத் தலைமை அறிவுறுத்திவிட்டது. வரப் போகும் நாள்களில் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பொறுத்தே, செயல் தலைவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்” எனத் தெளிவுபடுத்தினார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.