வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (06/01/2018)

கடைசி தொடர்பு:13:35 (06/01/2018)

`இனி அவர்தான்!’ - முதல்வரை கைகாட்டிய போக்குவரத்துத்துறை அமைச்சர்!

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள், மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் பெருமளவு இயங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், `அனைத்து இடங்களிலும் போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒருசில இடங்களில், சீராக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நாளைக்குள் முடிவுக்குவந்துவிடும். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பேருந்துகளை இயக்குவதைப் பொறுத்தவரை, நாளை  ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முறையாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில், இன்று 80 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தற்காலிக ஊழியர்கள் நியமனத்தில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இனி, போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுகுறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்' என்று கூறியுள்ளார்.