`ஐயா நீதி எசமானே..?' போக்குவரத்து ஊழியர்களின் மெர்சல் வாசகம்!

`சம்பளம் பத்தவில்லையென்றால் வேறு வேலைக்குப் போங்க' என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நெல்லையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிமனையில் எழுதிவைத்துள்ள வாசகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 23 தடவை பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே திடீரெனப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்துகளிலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், கடும் பாதிப்பைச் சந்தித்தனர்.

இதனிடையே, வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக்கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இந்த வேலை பிடிக்காவிட்டால், வேறு வேலைக்குப் போகலாம். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார். நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்துவருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து வளாகம் முன்பு சி.ஐ.டி.யு சார்பில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், நீதிபதிகளின் சம்பள விவரத்தைக் குறிப்பிட்டுள்ளதாேடு, `ஐயா... நீதி எசமானே... எங்கள் நியாயமான சம்பளத்தையும் ஓய்வுக்கால 5 ஆண்டு பாக்கியையும் கேட்டா தப்பா?' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!