வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (06/01/2018)

கடைசி தொடர்பு:15:15 (06/01/2018)

`சென்ட்ரலில் ஆட்டோ டிரைவரை பதறவைத்த போலீஸ்' - நடுவழியில் விழிபிதுங்கியப் பயணிகள்

chennai central

சென்னை சென்ட்ரல் பகுதியில் ஷேர் ஆட்டோவிலிருந்து பயணிகளை போக்குவரத்து போலீஸ் ஒருவர் இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி மூலம் மக்கள் சென்றுவருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டும் முடிந்தளவுக்கு அரசு பஸ்களை இயக்கிவருகின்றனர். முழுமையான பஸ் சேவை இல்லாததைத் தங்களுக்குச் சாதகமாக பெரும்பாலான ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்திவருகின்றனர். வழக்கமான கட்டணத்தைவிட இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாறுமாறாகக் கட்டணத்தை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் கேட்கின்றனர். வேறுவழியின்றி டிரைவர்கள் கேட்கும் கட்டணம் கொடுத்து மக்கள் பயணித்துவருகின்றனர். குறிப்பாக சென்னை சென்ட்ரலிருந்து எல்.ஐ.சிக்கு வர 200 ரூபாய் கட்டணம் கேட்டு சில ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சிக் கொடுக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில், சென்ட்ரல் அரசு மருத்துவமனை எதிரில் இன்று காலை நடந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. அதாவது, சென்ட்ரலிருந்து பஸ்சுக்காக ஏராளமானவர்கள் காத்திருந்தனர். அப்போது, வடபழனி பகுதியில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ஒன்று, சென்ட்ரலில் பயணிகளை ஏற்றிவிட்டு அண்ணாசாலை வழியாகச் சென்றது. பல்லவன் சாலை அருகே உள்ள மேம்பாலத்தில் ஷேர் ஆட்டோ வந்தபோது அதை போக்குவரத்துப் போலீஸ் ஒருவர் நிறுத்தியுள்ளார். ஆட்டோ டிரைவரிடம் பெர்மிட் இல்லாமல் நீ எப்படி இங்கு ஆட்டோ ஓட்டலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீஸுக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ஆட்டோவிலிருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பிறகு காலியாக அந்த ஆட்டோ வடபழனியை நோக்கிச் சென்றது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையைப் பார்த்து புலம்பியபடி அங்கிருந்து சென்றனர்.