வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (06/01/2018)

கடைசி தொடர்பு:21:48 (06/01/2018)

அரசுப் பேருந்துகளைப் பற்றிய புள்ளிவிவரங்கள்...! அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

திய உயர்வு, ஓய்வுபெற்ற பணியாளர்களின் நிலுவைத் தொகையை உடனயாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களில் குறிப்பிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 

பேருந்து

இந்நிலையில், நமது அரசுப் பேருந்துகளைப் பற்றி சில புள்ளிவிவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசுப் போக்குவரத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை.

பேருந்து விவரங்கள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 22,533 பேருந்துகள் உள்ளன. இவற்றில், சென்னை மாநகரப் பேருந்துகள் (MTC) மட்டும் 3,688. நகரப் பேருந்துகள் 6916. புறநகர் சேவை (Moffusil service bus) பேருந்துகள் 8,561. மலைவழி பேருந்துகள் (Ghat service) சேவை 528. மாவட்டங்களை இணைக்கும் (inside state) பேருந்துகள் 648; வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் (outside state) சேவை 435. ஸ்பேர் பஸ் எனப்படும் மாற்றுப் பேருந்துகள் 1,757 உள்ளன.

பேருந்துப் பயணக் கட்டண விவரம்:

தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு பேருந்துக்கான புதிய கட்டண நிர்ணயப் பட்டியலை வெளியிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அதே கட்டணத்தில்தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு வால்வோ (Volvo) பேருந்துகள் கட்டணப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

அரசுப் பேருந்து

ஒரு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டண விவரம் பின்வருமாறு:-

சாதாரணப் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 42 பைசாவும், எக்ஸ்பிரஸ்/செமி டீலக்ஸ் பேருந்துகளுக்கு 56 பைசாவும், சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளுக்கு 60 பைசாவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு 70 பைசாவும், வால்வோ பேருந்துகளுக்கு 90 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது.

கோர விபத்துகள்:

2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை அரசுப் பேருந்துகள், எண்ணற்ற கோர விபத்துகளுக்குள்ளாகி இருக்கின்றன. அந்த விபத்துகளில் 6,864 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுப் பேருந்துகள் மூலம் ஏற்பட்ட விபத்துகளும், அவற்றில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் ஆண்டுவாரியாக கீழே:-

2012-13 - விபத்துகளின் எண்ணிக்கை 1,233. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,382.

2013-14- விபத்துகள் 1,187. உயிரிழப்பு 1,318.2014-15- விபத்துகள் 1,165  உயிரிழப்பு 1,331. 

2015-16- விபத்துகள் 1,258. உயிரிழப்பு 1,460. 2016-17-  விபத்துகள் எண்ணிக்கை 1,209. இறப்பு 1,373.

நஷ்டஈடு :

பேருந்து

அரசுப் பேருந்துகள் மூலம் மற்ற வாகனங்களுக்கு விபத்து ஏற்பட்டிருந்தாலோ அல்லது மனித உயிரிழப்பு ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்தின்மீது வழக்குத் தொடுக்கப்பட்டால் அரசு தரப்பிலிருந்து நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, 2011-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை 5,691 வழக்குகள் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மக்கள் நீதிமன்றங்கள் (Lok-Adalat) அளித்த தீர்ப்பின்படி, சுமார் 85 கோடியே 25 லட்சம் ரூபாய்வரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

விசேஷ தினங்களில் சிறப்புப் பேருந்துகள் மூலம் வருவாய்:

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளிப் பண்டிகையின்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகைக்கால சிறப்புப் பேருந்துகள் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் அரசுக்குக் கிடைத்த வருவாய் விவரம்:-

2012- 13 ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது ரூ.87.37 கோடி; பொங்கல் பண்டிகையின்போது ரூ. 89.70 கோடி. 

2013-14 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் ரூ. 86.93 கோடி;

பொங்கல் பண்டிகை ரூ. 93.41 கோடி.

2013-14 தீபாவளிப் பண்டிகை ரூ. 83.96 கோடி;

பொங்கலின் போது 81.86 கோடி.

2015-16 தீபாவளிப் பண்டிகை ரூ. 83.92 கோடி;

 பொங்கல் பண்டிகை ரூ. 90.51 கோடி. 

2016-17 தீபாவளியின்போது ரூ. 85.75 கோடி. பொங்கல் பண்டிகை ரூ. 95.05 கோடியும் அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

இணையதளத்தில் இல்லாத ஒரு தகவல் என்ன தெரியுமா? தமிழகத்தில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் 60 சதவிகித பேருந்துகள் காலாவதியானவை. ஒரு பேருந்து வாங்கப்பட்டதிலிருந்து அதன் ஓட்டம் ஆறு ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர் மட்டுமே. அதன்பின் அந்தப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கக் கூடாது. ஆனால், அப்படி காலாவதியான சுமார் 14,000-க்கும் அதிகமான பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி.


டிரெண்டிங் @ விகடன்