தமிழக அரசுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் நிசான் வழக்கு! பொங்கிய போராட்டக்காரர்கள்

இழப்பீடு கேட்டு தமிழக அரசின்மீது வழக்கு தொடர்ந்துள்ள நிசான் நிறுவனத்துக்கு எதிராகத் தமிழ் தேசிய கட்சியினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் நிசான் தொழிற்சாலை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிசான் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நிசான் நிறுவனம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் தாயரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னைக்கு அருகே உள்ள ஒரகடத்தில் இயங்கிவருகிறது. மாநில அரசு தங்களுக்கு அளிக்க வேண்டிய ஊக்கத்தொகையான 77 கோடி டாலர் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனச் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் நிசான் ஆலை அமைக்க 2008-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டிய சலுகைகள் 2015-ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்பட வில்லை. 2,900 கோடி ஊக்க சலுகைத் தொகை மற்றும் 2,100 கோடி இழப்பீடு என மொத்தம் 5,000 கோடி அளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

நிசான், தமிழ் தேசிய கட்சி

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ் தேசிய கட்சியினர் மாநில அமைப்புச் செயலாளர் அருள், “நிசான் கம்பெனி தமிழக அரசுடன் 21 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி எந்த வழக்கானாலும் தமிழக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசுக்கு நிசான் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி 130 கோடி நிலுவையில் இருக்கிறது. இந்த வரியைச் செலுத்தாததால் தமிழக அரசு நிசான் கம்பெனிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து நிசான் நிறுவனமும் தமிழக அரசுக்கு எதிராக இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, சர்வதேச நீதிமன்றத்தில் நிசான் நிறுவனம் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஒரு கார் தயார் செய்வதற்கு ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் இலவசமாகக் கொடுக்கிறோம். தண்ணீர், மின்சாரம், இடம் உள்ளிட்ட சலுகைகளைக் கொடுத்தும், அவர்கள் வரியைச் செலுத்தவில்லை. மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டிச் செல்கிறார்கள். அதனால் அந்த நிறுவனத்தை எதிர்த்து இழுத்து மூடும் வரை போராட்டம் தொடரும்” என்கிறார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!