`கதர் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்றம் காண்போம்!' - வேட்டி கட்டியபடி அசத்திய குட்டீஸ்கள்!

வேட்டி தினத்தைக் கொண்டாடும் வகையில் நெல்லையில் பள்ளி மாணவர்கள் வேட்டி கட்டியபடி வந்து அசத்தினார்கள். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் 500 பேருக்கு இலவசமாக வேட்டிகள் வழங்கப்பட்டன.

வேட்டியில் வந்த மாணவர்கள்

தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டியை இளைஞர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஜனவரி 6-ம் தேதி வேட்டி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாகக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்தத் தினத்தில் வேட்டி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இளைஞர்களிடம் வேட்டி கட்டும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், நெல்லை தச்சநல்லூரில் உள்ள வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வேட்டிகள் தினம் கொண்டாட்டப்பட்டது.

பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் வேட்டி அணிந்து வந்து அசத்தினார்கள். பள்ளியின் தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு டி.எஸ்.பி-யான சக்திவேல் தொழிலதிபர் ராஜகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அப்போது பேசிய டி.எஸ்.பி சக்திவேல், `நமது பாரம்பர்ய உடையான வேஷ்டி, அயல்நாட்டவரையும் கவரக்கூடியது. கவிஞர்கள், பெரியவர்கள் உள்ளிட்டோர் வேட்டிகளை ஆடையாக அணிந்ததை நினைவுகூர வேண்டும். 

மாணவர்கள்

நமது பாரம்பர்ய உடையான வேட்டியை விவசாயிகள் முதல் அறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அணிகிறார்கள். கதர் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும் வகையில், கதர் வேட்டிகளை அனைவரும் அணிய வேண்டும். நாம் அணியும் உடையின் மூலமாகப் பல குடும்பங்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

விழாவில் பங்கேற்ற 500 விவசாயிகளுக்கு வேட்டிகள் வழங்கப்பட்டன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!