``மோடிஜி மாநிலத்தைவிட தமிழகம்தான் முன்னிலை!'' - நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலகல

"பிரதமர் மோடிஜியின் மாநிலத்தைவிட அதிகமாகத் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு வாங்கிக் கொடுத்தது எங்கள் ஆட்சி" என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

மோடி மாநிலத்தை விட

மதுரையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்த அமைச்சர், "இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை மக்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏழையாகப் பிறப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கேரளாவை சேர்ந்த நம் மாநகராட்சி கமிஷனர் பேசினார். அவர் சொன்னது உண்மைதான். அந்தளவுக்கு ஏழை எளியவர்களுக்குத் திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆட்சியில் மதுரை மாநகர் வளர்ச்சிக்குப் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், கலாசார தலைநகரம் மதுரையாகும். இந்த மண்ணில் பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். 1.87 கோடி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளன. அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். தமிழகம்போல் பொது விநியோகத் திட்டம் வேறு எங்கும் இல்லை. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்ததால், ஒரு நபருக்கு ஐந்து கிலோ கொடுக்கிறோம். 70 கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் வசிக்கும் மக்களுக்கும் இலவச அரிசியைக் கொண்டுபோய் கொடுக்கிறோம்.

பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வாங்கிக் கொடுத்துள்ளதில் தமிழகம்தான் முன்னிலை. 2,228 கோடி ரூபாய் பெற்று கொடுத்துள்ளோம். விவசாயம் அதிகம் நடைபெற்ற உ.பி, மஹாராஷ்ட்ரா மாநிலங்களைவிட ஏன் நம் நாட்டை ஆளுகிற மோடிஜியின் குஜராத்தில் பயிர் காப்பீடு மூலம் பெற்றது வெறும் 300 கோடிதான். தமிழகம்தான் இதில் முன்னிலை. எங்கள் ஆட்சியில் பாரிஸ் நகரத்துக்கு இணையாக மதுரை மாறவுள்ளது" என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!