வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (06/01/2018)

கடைசி தொடர்பு:18:25 (06/01/2018)

 `பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறீங்களா?' பிரதமருக்கு எதிராகக் கொதித்த இஸ்லாமியர்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லீம்கள்

இந்தக் கூட்டத்தில் ஜமாத்துல் உலமா சபை மற்றும் த.மு.மு.க, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ கட்சி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும்,  எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயலாளர் சபிபுல்லா, ஐ.ஆர்.ஐ.எஸ்.சி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்திருந்த ஷாஹூல் ஹாமீது எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராகவும் இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் செயல். இது இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்று முழங்கிய இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். 

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள்,“பா.ஜ.க-வின் மூன்றரை வருட ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குஜராத் கலவரத்தின்போது பெண்கள் கொடுமையாகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் 2 பெண்களை 14 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகப் பாலியல் தொல்லை செய்து அதைச் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார்கள். பிரதமரின் மனைவி ஜசோதாபென் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி அழைத்தால், அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவும் சேவை செய்யவும் தயாராக இருக்கிறேன் என்கிறாரே. அவரின் உரிமைகளைக் காப்பாற்ற முன்வராத பிரதமர் மோடி, முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரானது'' எனக் காட்டமாகப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா அறிவுக்குப் புறம்பாக உள்ளது. இதில் கூறியுள்ள மூன்றாண்டு சிறைத்தண்டனை என்பதையாவது நீக்கி இச்சட்டத்தை நிறைவேற்றலாம். பிரதமர் மோடியைக் குஜராத் மக்கள் முதல் தலாக்  கூறிவிட்டார்கள். அடுத்த தலாக்கை கர்நாடக மக்கள் கூறுவார்கள். மூன்றாவதாக நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள மக்களே தலாக் கூறி அனுப்பிவிடுவார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க