வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (06/01/2018)

கடைசி தொடர்பு:17:59 (06/01/2018)

`விபத்து வழக்கில் தில்லாலங்கடி வேலை' - அம்பலமான சென்னை போலீஸின் குட்டு

விபத்து நடந்த இடம்

சென்னையில் விபத்தை ஏற்படுத்திய பைக்கை விட்டுவிட்டு கார் ஓட்டியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 சென்னை உத்தண்டி கிழக்குக் கடற்கரை சாலை அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த விபத்தில் போலீஸாரின் தில்லாலங்கடி வேலை வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. 
சென்னை உத்தண்டி கிழக்குக் கடற்கரை சாலை அருகே கடந்த 24-ம் தேதி காலையில் கார் மோதி முதியவர் படுகாயமடைந்தாகச் சாஸ்திரிநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். படுகாயமடைந்த முதியவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் காரின் உரிமையாளர் பொன்சேகர், அந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். அதோடு, வழக்குப்பதிவு செய்ய சாஸ்திரிநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 

இதுகுறித்து காரின் உரிமையாளர் பொன்சேகர் கூறுகையில், "சம்பவத்தன்று, மருந்துவாங்க பனையூரிலிருந்து கானத்தூருக்கு என்னுடைய காரில் சென்றேன். உத்தண்டி, கிழக்குக் கடற்கரை சாலை அருகே காரில் சென்றபோது அவ்வழியாக வந்த ஒருவர், சாலையைக் கடக்க முயன்றார். அவரைப் பார்த்ததும் காரின் வேகத்தைக் குறைத்துவிட்டேன். இந்தச் சமயத்தில் என் காருக்குப் பின்னால் வந்த பைக் மோதி சாலையில் நடந்து சென்றவர் கீழே விழுந்தார். பைக்கில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் இருந்தனர். அவர்களும் படுகாயமடைந்தனர். பைக்கும் சேதமடைந்தது. விபத்து என்னுடைய காருக்குப் பின்னால் நடந்தது. ஆனால், சிலரின் தூண்டுதலின்பேரில் என் கார் மோதிதான் விபத்து நடந்ததாகச் சாஸ்திரிநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்ததோடு என் காரையும் பறிமுதல் செய்துவிட்டனர்.

போலீஸார் என்னிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை முழுமையாகத் தெரிவித்தேன். அப்போதுகூட அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைப் பார்த்தால் என்ன நடந்தது என்பது தெரியும் என்று கூறினேன். ஆனால், போலீஸார் என்னுடைய விளக்கத்தைக் கேட்கவில்லை. அதோடு பைக்கில் வந்தவர்களை அங்கிருந்து செல்ல அனுமதியளித்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையம் வரும்வரை போலீஸாரின் அணுகுமுறை எனக்கு மனவேதனையை அளித்தது. நான், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கருதிய போலீஸார், ஒவ்வொரு சிக்னலில் இருந்த போக்குவரத்து போலீஸாரிடம் மது அருந்தியதற்கான கருவி உள்ளதா என்று கேட்டப்படியே வந்தனர். உண்மையிலேயே நான் குடிபோதையில் இருந்திருந்தால் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்திருக்கலாம். ஆனால், அதை போலீஸார் செய்யவில்லை. இதனால், என் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். மேலும், விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 

சாஸ்திரி நகர் போலீஸார் கூறுகையில், "சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபிறகே காரை ஓட்டிய பொன்சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். எங்களுடைய விசாரணையில் விபத்துக்கு காரணம் கார் என்று தெரியவந்துள்ளது. முதியவர் மீது பைக் மோதியது குறித்த தகவல் தெரியாது" என்றனர்.

 இந்தச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பொன்சேகர், நாம் தமிழர் கட்சியில் உள்ளார். இதற்கு முன்பு அவர், அ.தி.மு.க-வில் இருந்தார். அ.தி.மு.க-விலிருந்து நாம் தமிழர் கட்சிக்கு மாறியது அ.தி.மு.க-வினருக்கும் பொன்சேகருக்கும் இடையே முன்விரோதத்தை ஏற்படுத்தியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க-வினரின் தூண்டுதலின்பேரில் போலீஸார், விபத்தை ஏற்படுத்திய பைக்கை விட்டுவிட்டு காரை ஓட்டிவந்தவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பொன்சேகர் தரப்பு, விபத்து நடந்தபோது பதிவான சி.சி.டி.வி கேமரா பதிவுகளைச் சேகரித்துள்ளனர். அதில், முதியவர் மீது பைக் மோதிய காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இது, சாஸ்திரிநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.