வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (06/01/2018)

கடைசி தொடர்பு:19:39 (06/01/2018)

“பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய ஜெர்மனி ஜவுளி ஆர்டர் நமக்கே!” கரூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை


 

ஜெர்மனியில், வரும் ஒன்பதாம் தேதி தொடங்கி பன்னிரண்டாம் தேதி வரை நடக்கும் ஜவுளிக் கண்காட்சியில், பாகிஸ்தானுக்கு ஜவுளி ஆர்டர்கள் அவ்வளவாகக் கிடைக்காது. அந்த ஆர்டர்களையும் சேர்த்து கரூர் ஏற்றுமதியாளர்களுக்குத்தான் 500 கோடி ரூபாய் வரை ஜவுளி ஆர்டர் கிடைக்கும். ஏற்கெனவே, ஜி.எஸ்.டி., நூல் விலையேற்றம் உள்ளிட்ட விஷயங்களால் நசியத் தொடங்கியிருக்கும் கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதி தொழில், இந்த ஜெர்மனி ஆர்டரால், புது உத்வேகத்தைப் பெறும்" என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள்.

ஜெர்மனியில் நடக்கும் இந்த ஜவுளிக் கண்காட்சியில், கரூர் மாவட்டத்திலிருந்து 150 பேர் கலந்து கொள்கிறார்கள். அங்கேதான், 'பாகிஸ்தானுக்குக் கிடைக்காத ஆர்டர்களும் சேர்த்து தங்களுக்குக் கிடைக்கவிருப்பதாக’ நம்பிக்கையாகச் சொல்கிறார்கள். இதுபற்றி விசாரித்தோம்.

தமிழகத்தில், ஜவுளி உற்பத்தி மையங்களில் கரூர் மாவட்டத்துக்கு முக்கிய இடமுண்டு. சேலத்தில் சேலை ரகங்களும், திருப்பூர், கோவை, ஈரோட்டில் காடா துணிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரூர் மாவட்டத்தில் பெட்ஷீட் உள்ளிட்ட வீட்டு உபயோக துணி வகைகளும், ஏற்றுமதி துணி வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையில், கரூர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட ஜவுளித் தயாரிப்பு கம்பெனிகளும், 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களும், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜாம் ஜாம் என்றிருந்த இந்தத் தொழில், சாயப்பட்டறை பிரச்னைகளால் நலியத் தொடங்கியது.

சாயமேற்றும் பட்டறைகள் இல்லாத நிலையில், சிறு நிறுவனங்கள் இங்கே ஜவுளித் தொழிலை விட்டு வெளியேறிவிட்டாலும், சில பெரிய நிறுவனங்கள் ஜவுளித் தொழிலை விட முடியாமல் தொடர்ந்து சிரமதிசையில், இயங்கிக் கொண்டிருக்கின்றன. கொள்முதல் செய்யப்படும் நூல் பேல்கள் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில்தான் சாயமேற்றி வருவதால், உற்பத்தி செலவு அதிகரிப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் புலம்பி வந்தனர். இன்னொரு பக்கம், ஜி.எஸ்.டி வரி, நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட தடைகளால் ஜவுளி உற்பத்தி தொழிலும், அதையொட்டிய ஜவுளி ஏற்றுமதித் தொழிலும் பாதிப்படைந்துள்ளதாக கண்ணைக் கசக்கி வந்தனர். இந்தச் சூழலில்தான், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுக்கும், ஜெர்மனி கண்காட்சி தங்களுக்குப் புது நம்பிக்கையைத் தரும் என்று உற்சாகமடைந்திருக்கிறார்கள் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் கரூர் நகரத் தலைவரும், ஜவுளி ஏற்றுமதியாளருமான ஸ்டீன்பாபு,

 “இவ்வளவு பிரச்னைகள் எங்கள் தொழிலை பாதித்தாலும், எங்களுக்குக் கைகொடுத்து, ஜவுளிக்கான பல்க் ஆர்டரைப் பெற்றுத் தருவது ஜெர்மனியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜவுளிக் கண்காட்சிதான். ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் வரும் 9-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை ஜவுளிக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. வழக்கமாகக் கரூரைச் சேர்ந்த 80 ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்தக் கண்காட்சியில் ஜவுளி அரங்குகளை அமைப்பார்கள். ஆனால், சாயப் பிரச்னை, ஜி.எஸ்.டி வரி, நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்த வருடம் 55 ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமே ஜெர்மனி கண்காட்சியில் அரங்குகள் அமைக்கவிருக்கிறார்கள்.

இந்தக் கண்காட்சியில் வைக்க ‘சாம்பிள்’ தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. அதோடு, 55 ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர்த்து, அந்தக் கண்காட்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளவும், அந்தக் கண்காட்சிக்கு வரும் வெளிநாட்டு ‘பையர்’களைப் பார்த்துப் பேசி ஆர்டர்களை இறுதி செய்திடவும் கரூர் ஏற்றுமதியாளர்கள் 150 பேரும் பிராங்பர்ட் செல்ல உள்ளோம். ஆக, கரூர் நகரத்திலிருந்து மட்டும் அந்தக் கண்காட்சிக்கு 250 பேர் செல்லவிருக்கிறோம்” என்றார்.

 அடுத்து பேசிய, மற்றொரு ஏற்றுமதியாளரான சுந்தரேசன்,

“ஜி.எஸ்.டி அமலாக்கம், ஏற்றுமதியாளர்களுக்குத் தந்து கொண்டிருந்த டிராபேக் 7 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைப்பு, ஜி.எஸ்.டி-யாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கட்டிய தொகை 300 கோடி ரூபாய் ஆகியன ரீஃபண்டாகத் தரப்படாமல் தேக்கமடைந்து நிற்கும் நிலை, வரலாறு காணாத நூல் விலையேற்றம் (20 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை உயர்வு), பணமதிப்பு குறைந்துள்ள நிலை உள்பட பல பிரச்னைகளுக்கிடையே கரூரிலிருந்து ஜெர்மனி ஜவுளிக் கண்காட்சியில் கலந்துகொள்ள செல்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் தடையால், அந்தக் கண்காட்சியில், பாகிஸ்தானுக்கு ஜவுளி ஆர்டர்கள் பெரிய அளவில் இந்த ஆண்டு கிடைக்காது என்று நினைக்கிறோம். இந்த நிலையில், அவர்களின் ஆர்டர்களும் சேர்ந்து எங்களுக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய்க்கு இந்த ஜெர்மனி ஜவுளிக் கண்காட்சியில், ஆர்டர் கிடைக்கும் என்று நம்புகிறோம். இது எங்களுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு.

அதேநேரத்தில், ஜவுளித் தொழில் மேற்கண்ட பல்வேறு பிரச்னைகளில் தொடர்ந்து மாட்டியிருப்பதால், நம்முடைய விலைக்கு ஆர்டர்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஜெர்மனி ஜவுளிக் கண்காட்சியில், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடந்த ஆண்டைவிட அதிகளவில் ஜவுளி ஆர்டர்களைப் பெற்று வர ஏதுவாக, டிராபேக் தொகையை 5 விழுக்காட்டிலிருந்து பழையபடி 7 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தித் தர வேண்டும். நிலுவையில் உள்ள 300 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி ரீஃபண்ட் தொகையை உடனடியாகக் கரூர் ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்திட மத்திய அரசு வழிவகை செய்திட வேண்டும். அப்போதுதான், கரூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழில் ஓரளவுத் தாக்குப்பிடித்து நடைபெறும். இல்லையென்றால், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழில் விரைவில் அழிவைச் சந்திக்கும்" என்று எச்சரித்து முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்