திருடிச்சென்ற சில மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பதறவைத்த போலீஸ்!

தூத்துக்குடியில் மீன்வலை பின்னிவிட்டு வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறித்துச் சென்ற 2 திருடர்களை சில மணி நேரத்திலேயே தாளமுத்துநகர் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

Thalamuthu Nagar police station

தூத்துக்குடி வெள்ளப்பட்டியில் உள்ள 26 வீடு காலனியைச் சேர்ந்தவர் மீனவர் சார்லஸ். இவரது மனைவி ரெஜிசெலின். இவர் இப்பகுதியிலுள்ள மீன்வலை பின்னும் கூடத்தில் மீன்வலை பின்னும் பணியில் ஈடுபட்டவர். வலை பின்னால் பணி முடிந்ததும் கூடத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 பேர் ரெஜிசெலின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். ரெஜிசெலின் சத்தம் போடவே, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பைக்கில் தப்பித்துச்  சென்ற திருடர்களை விரட்டிச் சென்றனர். பைக்கை கீழே போட்டுவிட்டு திருடர்கள், அப்பகுதியிலுள்ள முள்காட்டில் பதுங்கினர். 

இச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் வனிதாராணி தலைமையிலான போலீஸார் முள்காடு பகுதியைச் சுற்றி வளைத்து 2 திருடர்களையும் மடக்கிப் பிடித்தனர். தூத்துக்குடி துரைசிங் நகரைச் சேர்ந்த ராமன் மற்றும் தாய்நகரைச் சேர்ந்த விக்ரமன் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 பவுன் செயின், ஒரு செல்போன், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதில், ராமன் மீது ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த பெண்ணின் கழுத்தை நெரித்து செயின் பறித்துச் சென்ற வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு  நிலுவையில் உள்ளது. செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காக இருவரும் தனது நண்பரிடம் பைக் வாங்கி வந்துள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை சில மணி நேரத்தில் மடக்கிப் பிடித்த தாளமுத்துநகர் போலீஸாரை மற்ற காவல் நிலைய போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். முள்காட்டில் பதுங்கிய திருடர்களைச் சுற்றி வளைத்து சிறிது சிறிதாக முன்னேறி மடக்கிப் பிடித்த சம்பவம் சினிமா காட்சி போல இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!