`இதுவரை எந்தப் புகாரும் வரவில்லையே!' - அமைச்சரின் அசால்ட் பதில்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று பயனாளிகளுக்குத் தமிழக அரசின் திருமண உதவித் திட்டம் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "திருப்பூர் மாவட்ட மக்களுக்கு கடந்த 2 நாள்களில் மட்டும் இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 9 கோடி மதிப்புக்கு பயன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல தற்போது பொங்கல் பரிசுத் திட்டமும் முழு மூச்சாக மக்களிடத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தற்போது 80% அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டு வருகின்றன.

கனரக வாகனங்கள் ஓட்டத் தெரிந்த தன்னார்வலர்கள் பலர் தாமாக முன்வந்து அரசுப் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து இன்னும் எத்தனை நாள்களுக்குப் பேருந்துகளை இயக்க முடியும் என்று கேட்கிறார்கள். அவர்களில் யாரும் தற்காலிக ஓட்டுநர்கள் இல்லை. அனைவருமே ஓட்டுநர்கள்தான். எங்களுக்கு மக்களின் நலன்தான் முக்கியமே தவிர, இந்த அரசு மற்றவர்களைப் பற்றிக் கவலைகொள்ளாது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!