`மக்களின் உயிரோடு விளையாடுவதா?' - முதல்வர் மாவட்டத்தில் கொதிக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள்

``முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் அதிகளவு ஆட்டோ, டாக்ஸி, ஆம்புலன்ஸ், ஸ்கூல் வேன் ஓட்டுபவர்களை நியமித்து சேலம் மண்டலத்தில் உள்ள ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைநகரங்களுக்கு ஓட்டச் சொல்லி மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள். ஏதாவது விபரீதம் நேர்ந்தால் இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்'' என்கிறார்கள் சேலம் போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள்.

இதுபற்றி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சேலம் மண்டலப் பொதுச் செயலாளர் மணி, ``சேலம்  மண்டலத்தில் 19 போக்குவரத்துப் பணிமனைகள் உள்ளன. அதில், 7,076 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த மண்டலத்தில் வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகள் 585, உள்ளூர் பேருந்துகள் 490 மற்றும் மாற்றுப் பேருந்துகள் 163 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. 

தற்போது நடைபெற்று வரும் காலவரையற்றப் போராட்டத்தில் நேரடியாக 6,500 பேர் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதனால், சேலம் மண்டலப் போக்குவரத்துப் பணிமனைகள் முழுவதும் முடங்கிவிட்டது. மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களுடைய போராட்டம் மிகவும் நேர்மையான போராட்டம். அதை உணர்ந்து மக்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அரசு, தொழிற்சங்கத்தோடு பேசி நல்ல தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். ஆனால், வீம்புக்கு சட்டமன்ற உறுப்பினர் பஸ் ஓட்டுவது, அனுபவம் இல்லாத ஆட்டோ டிரைவர், ஸ்கூல் டிரைவரை தினக்கூலிக்கு ஓட்டச் சொல்லி எங்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள். 

முதல்வர் மாவட்டம் என்பதால், அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் அதிகளவு ஆட்டோ, டாக்ஸி, ஆம்புலன்ஸ், ஸ்கூல் வேன் ஓட்டுபவர்களைத் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு நியமித்து டிப்போவில் இருந்து வண்டியைத் தட்டுத் தடுமாறிப் பேருந்து நிலையத்தில் மக்களின் காட்சிப் பொருள்களாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி மக்களை ஏற்றிக்கொண்டு ஓட்டச் சொல்கிறார்கள். சேலம் மண்டலத்தில் ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை நகரங்கள் இருக்கின்றன. மலைப் பகுதிகளுக்குச் செல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும். புதியவர்களை ஓட்டச் சொல்லி மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள். ஏதாவது விபரீதம் நேர்ந்தால் இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!