வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (06/01/2018)

கடைசி தொடர்பு:19:15 (06/01/2018)

தென் மாவட்ட தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள்? - கோஷ்டி மோதல்களால் குழப்பத்தில் தொண்டர்கள்!

தென் மாவட்ட தி.மு.க-வில் நடக்கும் குளறுபடிகளால் கட்சித் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டி மோதல்களால் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்கள் உருவாகியிருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இதனால் கட்சிக்குச் சீரழிவு ஏற்படும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள் கட்சியின் தீவிர விசுவாசிகள். 

கோஷ்டி மோதலால் தனி காலண்டர்

தி.மு.க-வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், கட்சியிலிருந்த கோஷ்டிகள் மறையத் தொடங்கின. அனைவருமே ஓர் அணியாக ஸ்டாலின் தலைமையில் அணிவகுத்தனர். ஆனால், தற்போது தென் மாவட்ட தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் தோன்றியிருப்பதாக முன்னணி நிர்வாகிகளே புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்ததைத் தொடர்ந்து, தொண்டர்களிடம் கட்சியின் மீதான நம்பிக்கை குலைந்துள்ளது. தொண்டர்கள் மட்டும் அல்லாமல் முன்னணி நிர்வாகிகளே குழப்பத்துடன் இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. நெல்லை மாவட்ட தி.மு.க-வில், நெல்லை மேற்கு, நெல்லை கிழக்கு, மத்திய மாவட்டம் என 3 மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. 

தூத்துக்குடி மாவட்டத்தில், பெரியசாமியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கட்சியினர் மட்டுமல்லாமல், பொதுவான தரப்பினரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்களில் கோஷ்டிகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. வடக்கு மாவட்டத்தில் பெரியசாமியின் குடும்பத்துக்குள் நடக்கும் வாரிசுச் சண்டையே கட்சியைக் கூறுபோடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கீதாஜீவனுக்கு எதிராக, அவரின் சகோதரரான ஜெகன் களமிறங்கியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட இருவருமே தயாராகி வருவதால் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி இருதரப்பிலும் நடந்துவருகின்றன. இருவருமே தனித்தனியாகக் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். எதிர்தரப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என ஒன்றிய, பகுதிக் கழக, கிளைக் கழக நிர்வாகிகளை நிர்பந்திப்பதால் கட்சியினர் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். 

கீதாஜீவன், ஜெகன் ஆகியோர் புத்தாண்டுக்காகக் காலண்டர்கள் வெளியிட்டுள்ளனர். அதில்கூட ஒவ்வொருவரும் பிறருடைய புகைப்படம் அச்சிடாமல் கவனமாகட் தவிர்த்து இருக்கிறார்கள். இதனிடையே, கீதாஜீவனின் மற்றொரு சகோதரரான ராஜா, `நாம் இந்தியர் கட்சி’ என்கிற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதன் கொள்கை விளக்க மாநாடு நெல்லையில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாகத் திருச்சியில் நடக்கவிருக்கிறது. அவர் தி.மு.க-வையும் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பெரியசாமியின் மகனது தனிக்கட்சி

தி.மு.க தலைவர் கருணாநிதியின் `முரட்டுப் பக்தன்’ என வர்ணிக்கப்பட்ட பெரியசாமி இருந்தவரையிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அவருக்குப் பின்னர், வாரிசு அடிப்படையில் பொறுப்புக்கு வந்துள்ள கீதாஜீவனுக்குக் குடும்பத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியிருப்பது கட்சி மேலிடத்தைச் சிந்திக்க வைத்துள்ளது. ஏற்கெனவே கட்சிக்குள் ஸ்லீப்பர் செல்கள் மேலோங்கி வரும் சூழலில், தென் மாவட்டங்களில் கட்சி பலவீனப்படுவதை சமாளிக்க அதிரடி முடிவுகளை எடுக்க ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. தென் மாவட்ட தி.மு.க-வுக்கு இப்போதைய தேவை அறுவைசிகிச்சையே என்று தொண்டர்கள் தெரிவிப்பதை முற்றிலுமாகப் புறக்கணித்து விட முடியாது.