கபடிப் போட்டியில் கோப்பைகளைக் குவிக்கும் கொட்டக்குடி கிராம இளைஞர்கள்!


கபடி

மதுரை மேலூரை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கபடிப் போட்டியில் தொடர்ச்சியாக வென்று கோப்பைகளைக் குவித்துவருகின்றனர். பளபளக்கும் கோப்பைகளையும், மெடல்களையும் அடுக்கி வைத்து தங்கள் அடையாளத்தை நிலை நாட்டிவருகின்றனர் .

இதுகுறித்து கொட்டக்குடி இளைஞர் சுதாகரிடம் பேசினோம் ‘ எங்கள் அணியின் பெயர் ஐய்யனார் வி.எம்.பி கபடிக் குழு. தற்போது எங்கள் அணியின் பெயரை ஏ.எஸ்.கே லக்கி பாய்ஸ் என்று மாற்றியுள்ளோம் . எங்கள் அணி கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் இயங்கி வருகிறது ஆனால் 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றிக்கோப்பை அள்ளி வந்துள்ளோம். சுற்றியுள்ள எந்த கிராமத்தில் கபடிப் போட்டி நடந்தாலும் ஒரு கை பாத்திருவோம். போட்டியில் வென்று கிடைக்கும் பணம் எங்களுக்கு முக்கியமல்ல அதைத்தாண்டி வெற்றிக்கோப்பையும், அது தரும் சந்தோசமும்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பலமுறை தோல்வியையும் சந்தித்துள்ளோம். ஆனால், நாங்கள் தோல்வியடையும் போட்டியில், எதிரணிக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்திருப்போம். 

kabadi

அதைப்பற்றி கவலைப் பட்டதில்லை, தோல்வியடைந்த போட்டியைப் பயிற்சி ஆட்டமாகத்தான் எடுத்துக்கொள்வோம். கபாடி போட்டியில் வெற்றி பெரும் பணத்தை சேர்த்து, அடுத்த முறை விளையாடும் போட்டிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வோம். மேலும், சேமித்த பணத்தை வைத்து சில சமூகப் பணிகளையும் செய்திருக்கிறோம். எங்கள் அணி தற்போது பல வெற்றிகளைக் குவித்து எங்கள் கிராமத்துக்குப் பெருமை சேர்த்துவருகிறது. எங்களுடைய இலக்கு மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று அடுத்த அடுத்த கட்டங்களுக்குச் சென்று நமது பாரம்பர்ய விளையாட்டை காக்கவேண்டும் என்பதே" எனத் தங்கள் லட்சியத்தை விளக்கினார்.

  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!