‘மேடுபள்ளங்களில் திணறும் புது டிரைவர்கள்’... சென்னை ஸ்ட்ரைக் நேரடி ரிப்போர்ட்!

பஸ் ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தலைநகர் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆங்காங்கே இயக்கப்பட்ட பேருந்துகளில் காக்கிச்சட்டை சீருடை அணியாத ஓட்டுநர்களையே அதிகமாகப் பார்க்கமுடிந்தது. பஸ் ஸ்டிரைக் ஓட்டுநர்களான இவர்களின் ஓட்டும்திறமையால், திருப்பங்கள், சந்திப்புகளில் மற்ற வாகனங்களுடன் மோதிவிடுமோ என்ற அச்சத்தோடும் கலக்கத்தோடும் பொதுமக்கள் பயணம்செய்ய நேரிட்டது. 

மேற்கு சென்னையின் ஆவடி, பாடியநல்லூர் தொடங்கி கிழக்குக் கோடியில் இருக்கும் பல்லவன் இல்லம்- மத்திய பணிமனைவரை, தெற்கில் தாம்பரம் முதல் வடக்கில் தண்டையார்பேட்டை, எண்ணூர்வரை அனைத்துப் பேருந்துப் பணிமனைகளிலும் சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. வழக்கமாக அதிகாலை 5 மணியளவில் இயங்கத்தொடங்கும் முதல்பகுதி வேலைநேரத்தில், பள்ளிநேரம் நெருங்கையில்தான் மெதுமெதுவாகப் பேருந்துகள் முக்கியச் சாலைகளில் தென்படத் தொடங்கின. அதற்கு முன்பே வந்திருந்து பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், கூட்டமாக இருந்தபோதும் கிடைக்கும் வண்டிகளில் ஏறிக்கொண்டனர். 

அன்றாடம் பேருந்துகளை இயக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் இயக்குநர்களுக்கும் இன்று பேருந்தை இயக்கியவர்களுக்கும் பளிச்சென வித்தியாசம் தெரிந்தது. நெரிசல்- நெருக்கடி மிகுந்த சென்னையின் சாலைகளில் மிக லாகவமாகப் பேருந்தை ஓட்டிச்செல்லும் மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு நேர்மாறாக, ‘அவசரகால’ ஓட்டுநர்கள் செயல்பட்டதைப் பார்த்து பயணிகள் வேடிக்கைபார்த்தபடி பயணித்தனர்.

மாதவரம், ஆவடி, மந்தைவெளி, மத்திய பணிமனை, ஆலந்தூர், அண்ணாநகர், அம்பத்தூர், அயனாவரம் உட்பட்ட பணிமனைகளைச் சேர்ந்த பேருந்துகளை இயக்கியவர்களில் ஒருசிலரைத் தவிர, வண்டியோட்டிய பெரும்பாலானவர்களும் சீருடை அணிந்திருக்கவில்லை. சிலர் காக்கி பேன்ட் மட்டும் அணிந்து மற்ற நிறச் சட்டையுடன் வண்டிகளை ஓட்டினர். அரசியல் கட்சிப் பிரமுகர்களைப் போல பலரும் வெள்ளை கதர் சட்டைகளிலும் காட்சியளித்தனர். சில பணிமனைகளில் உள்ளே போய் வெளியே வரும்போதும் சீருடையில்லாமல் வண்டியோட்டியவர்களை அதிகாரிகள் பார்த்தார்களா; மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பெரும் கேள்விதான்!

பஸ் ஸ்டிரைக்

பொதுவாக மோட்டார் வாகனச் சட்டப்படி விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியது, ஆர்டிஓ எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சார்ந்த துறையின் பொறுப்பு. அண்ணாநகர் மேற்குப் பணிமனையில் நிலவரத்தை நேரில் பார்க்கச் சென்றிருந்தபோது, சீருடை இல்லாத ஓட்டுநர் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, அதைப் பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பச்சை நிறத்திலான ஆர்டிஓ வாகனம் ஒன்று அதைப் பின்தொடர்ந்தபடி சென்றது.  

அனைத்துப் பேருந்துப் பணிமனைகளின் முன்பாகவும் குறைந்தது மூன்று குழுவினராவது போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அம்பத்தூர் பணிமனையில் படம் பிடிக்க முயன்றபோது சில பணியாளர்கள் நம்மை நிறுத்தி, பிரச்னை குறித்த விவரங்களை விவரித்தார்கள். “வேலை புடிக்கலைனா வூட்டுக்குப்போனு சொல்றாங்களே... நாங்க இனாமாவா கேக்குறோம்? பல வருசமா எங்கள் சம்பளத்துல பிடிச்ச துட்டத்தானப்பா கேக்குறோம்.. இத்தக்கூடப் புரியாம இன்னா கோர்ட்டு ஆடரு போட்றாங்களோ..?” என உயர் நீதிமன்றத்தின் தலைமைநீதிபதி அடங்கிய அமர்வு நேற்று கூறிய உத்தரவுக்குக் கடுமையாக அதிருப்தி தெரிவித்தனர். உடனே மேலும் பலரும் சூழ்ந்துகொண்டு இதே கருத்தை ஆவேசத்தோடு கூறினார்கள். 

உங்களோடு பணியாற்றும் ஊழியர்கள் பேருந்துகளை இயக்கவும் செய்கிறார்களே என நாம் கேட்க, “ ஆளும் கட்சியைச் சேர்ந்தவங்க பலருக்கு எப்போமே ‘ஆன்டூட்டி’னு பதிவுசெய்துகினு சொம்மாவே இருப்பாங்க. அப்படிப்பட்டவங்க இன்னிக்கிதான் வண்டிய ஓட்டுறாங்க.. அதப் பாத்துருப்பீங்க.. வெளி ஆளை வச்சியும் ஓட்ட முயற்சி பண்றாங்க.. காலையில ஆபீசுக்கு வந்து, ஒரு சிங்கிளுக்கு 300 தருவியானு கேட்டு, இல்லைனதும் தம்பாட்டுக்கு ஆட்டோ எடுக்கப் போயிட்டாங்க.. இதுதான் இவங்க லட்சணம்” எனச் சீறினார்கள், மூத்த பேருந்து ஊழியர்கள். 

பஸ் ஸ்டிரைக்

அயனாவரம் பணிமனையின் முன்பு கொன்னூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களின் வரிசையால் கடும் நெரிசலாக இருந்தது. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பேருந்து( சீருடை இல்லாதவர்தான் ஓட்டுநர்), ஆடி அசைந்து நகர வாகன ஓட்டிகள் எல்லாரும் ஒரே நேரத்தில் கூச்சலிட, அப்போதும் மெதுவாய் அங்கிருந்து நகர்ந்து சென்றது, வள்ளலார் நகருக்குச் செல்லவேண்டிய அந்த மாநகரப் பேருந்து. 

அடுத்து, சென்னைப் பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாகச் செல்லும் பூவிருந்தவல்லி சாலையில் பேருந்து ஓட்டத்தைப் பார்க்கச்சென்றோம். அத்திபூத்தாற்போல பச்சை வண்ணத்தில் பல சிற்றுந்துகள் வரிசைகட்டி வந்தன. ஆனால் அங்கு நிற்கவே இல்லை. நேராகப் போய்க்கொண்டிருந்தது. ஒருவேளை பாயின்ட் டூ பாயின்ட் வண்டியாக மாற்றிவிட்டார்களோ, என்னவோ! காத்துக்கொண்டிருந்த பயணிகள் அரசுப் பேருந்து ஊழியர்களையும் சேர்த்துத் திட்டித்தீர்த்தனர். 

கிண்டி, வடபழனி, பாடியை இணைக்கும் நூறடி சாலை, அண்ணா சாலை, பாரிமுனை, சென்ட்ரல் ரயில்நிலையம், எழும்பூர் ரயில்நிலையம், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகரை இணைக்கும் பூவிருந்தவல்லி( ஈவெரா) சாலை ஆகியவை உட்பட சென்னையின் முதன்மைச் சாலைகளில், அரசுப் பேருந்துகளுக்குப் பதிலாக இருசக்கர வாகனங்களும் கார்களும் மூவர் செல்லக்கூடிய ஆட்டோவண்டிகளும் 9 பேர் செல்லவேண்டிய பகிர்வுக்கட்டண ஆட்டோவண்டிகளுமே அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டன. 

உள்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களை, இந்தச் சாலைகளில், ( பாரிமுனையை நோக்கி, அண்ணா சாலையை நோக்கி) ரூட் போட்டுக்கொண்டு ஆட்களை வண்டிக்குள் திணித்துக்கொண்டு இயக்கினார்கள். வழக்கமாக ஆட்டோகளில் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் தொலைவுக்குகூட 150 முதல் 200வரை கொள்ளைக்கட்டணம் வசூலித்தனர். இப்படி வசூலிப்பதை அறியாமலா மோட்டார் வாகனச் சட்டத்தை இயக்கும் ஆர்டிஓ துறை இருக்கும்? ஒருவேளை இப்படி நடக்கட்டும் என விட்டுவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!