வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (07/01/2018)

கடைசி தொடர்பு:09:13 (07/01/2018)

“ஆயிரம் ஜல்லிக்கட்டு பார்த்தாச்சு... நெஞ்சுல மட்டுமே 6 ஆப்ரேஷன்!”- மாடுபிடி வீரர் மூர்த்தி

பொங்கலைத் தொடர்ந்து எதிர்வரவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அலங்காநல்லூருக்கு விசிட் அடித்தோம். களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளுடன் காளையர்கள் மோதிக் கொள்ள, திகைத்து நின்ற நம்மை கூட்டிக் கொண்டுபோய் ‘இவரு தான் எங்க குரு’ என அறிமுகம் செய்து வைத்தனர் அங்கிருந்த வாண்டுகள். காளையோடு நின்றுக்கொண்டிருந்தார் மூர்த்தி.

ஜல்லிக்கட்டு

‘மேட்டுப்பட்டி மூர்த்தி’ என டைப்  செய்தால் யூடியூபே திணறும் அளவுக்கு காளைகளை அடக்கிய வீடியோஸை குவித்து வைத்திருக்கும் அவர், மதுரை மாவட்டத்தின் பெயர் பெற்ற மாடுபிடி வீரர். திரைப்பட நடிகர்களைப் போல் இவருக்கென ஒரு ரசிகர் மன்றம்  சிவகங்கையில் இயங்குகிறது. அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்து இளைஞர்களுக்கு மாடு பிடிக்க பயிற்சி அளிப்பது, ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வது என ஜல்லிக்கட்டுதான் இவர் வாழ்க்கையே. காளைகளை சுத்துப்போட்டுப் பிடித்த களைப்பு சிறிதுமின்றி நம்முடன் பேசத் தொடங்கினார்,

“1993 வாடிப்பட்டி ஜல்லிக்கட்டுல எங்க அண்ணே இறந்த அடுத்த நாள், முதன் முதலா வாடிவாசல எதிர்த்து  நிக்கிறேன். அப்போ எனக்கு வயசு பதிமூணு. 'இளங்கண்ணு பயமறியாது சொல்றத போல' களத்துல நின்னப்போ எனக்கு பயம் தெரியல. காளையை அடக்கணும்கிற வைராக்கியம் மட்டும்தான். அப்போ தொடங்கி இப்போ வரை கிட்டத்தட்ட ஆயிரம் ஜல்லிக்கட்டைப் பாத்துட்டேன். பாலமேடு, மணப்பாறை, குலமங்களம், சத்திரப்பட்டி, அவனியாபுரம், புதுக்கோட்டை கண்ணாவரம், பொன்னாடைப்பட்டி, துவரங்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, தருமபுரினு நான் இறங்காத களமே இல்ல. நான் களத்துல இறங்குறேன்னு தெரிஞ்சாலே மாட்டுக்காரங்க,  தன்னோட மாட்டை நிறுத்தி வைச்சுகிட்டு, நான் களத்தை விட்டு வெளிய போன பிறகு அந்த மாட்டை அவுத்து விட ஆரம்பிச்சாங்கே. வாடிவாச ஜல்லிக்கட்டு மட்டுமில்லாம வெளிவிரட்டு, வட ஜல்லிக்கட்டுனு காளைய அடக்குற பித்தம்  முத்திப் போச்சு. இதுவரை ஏகப்பட்ட குத்து வாங்கியிருக்கேன். களத்துல இறங்கி பரிசு வாங்குறோமோ இல்லயோ, கொறைஞ்சது ஒரு குத்தையாது வாங்கிட்டு வந்துறது. ஒருமுறை பனங்குடி வட ஜல்லிக்கட்டுல காரி மாட்டோட கொம்புல சிக்கிக் கிட்டேன். மண்ணுக்குள்ள போட்டு சொழட்டி எடுத்துருச்சு, அப்ப வாங்குனதுதான் இந்த தழும்பு” என்று காயங்களைக் காட்டிக் கொண்டே மேலும் தொடர்கிறார்.

ஜல்லிக்கட்டு

இதுவரை நெஞ்சுல மட்டும் ஆறு ஆப்ரேஷன் பண்ணியிருக்கேன். வயித்துலயே கிட்டத்தட்ட முப்பது தையல்கிட்ட போட்ருப்பேன். இப்புடி உடம்பு முழுக்க மாடுக கொடுத்த பரிசா வைச்சிருப்பேன்" என்றவரை இடைமறித்து.... அது மட்டுமில்லீ்ங்க 'செக்குடி, புலிக்குளம் காளை கரெக்டா கொம்ப வைச்சு அண்ணே தொண்டையில பதம் பார்க்க அவரு குரலே மாறிப் போச்சு 'என கண்சிமிட்டுகிறார்கள் அவரைச் சுற்றிய இளவட்டங்கள்.

‘அடேய் அதெல்லாம் வீரத்தோட அடையாளமுடா’ என அதட்டிக் கொண்டே மேலும் தொடர்கிறார், “1998, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல திருச்சி மாறு கொம்பு சிவா மாடு, அப்பறம் 2010-ல ஆம்பூர் செவளை மாட்டை அடக்குனது... இதெல்லாம்தான் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஜல்லிக்கட்டு. இந்த மாடு வந்தா நான் பிடிப்பேன்னு, போட்டி கட்டி பிடிச்சது. எந்த ஊரு ஜல்லிக்கட்டுக்குப் போனாலும் உங்களுக்குனு ஒரு மாடு வெயிட்டிங். நின்னு வெளாடுங்கனு சொல்லுவாங்ய்க.  எவனும் ஒத்த ஆளா நின்னு மாடு புடிக்கிறது கிடையாது. அதுக்கு நம்ம நட்போட ஒத்துழைப்பும் வேணும்,"  என தன் நண்பர் மல்லாத்து நாகராஜை காட்டி முறுவலிக்கிறார்.

“நாளைக்கு ஜல்லிக்கட்டுனா, இன்னைக்கே பயலுகளோட ஒக்காந்து களத்துல எப்படி வெளாடணும்னு பிளான் போட்டுருவேன். வாடி வாசலுல அணைமரம் வைக்கிற திணுசுலயே காளையை  எப்புடிப் பிடிக்கணும்னு கணிச்சுருவேன். சுத்துக்கட்டை வைச்சா  ஒளிஞ்சு நின்னே மாட்டைப் பிடிச்சுரலாம். அதே போக்கு வாடியா இருந்தா மணிக்கு 110 கி.மீ வேகத்துல மாடு வெளிவரும் அப்போ ஒளிஞ்சு நின்னு பிடிக்க முடியாது. அதுக்கு சரியான டிரெயினிங் எடுக்கணும். களத்துல இறங்குனா நம்ம பயலுக மட்டும் 25 மாடுகிட்ட புடிப்பாய்ங்க" என்றவரின் பின்னால் இளந்தாரிகளின் பட்டாளம்.

ஜல்லிக்கட்டு

“வாடியில மாடு பிடிக்க பழகினவங்க, அத்தனை சுலபமா வட ஜல்லிக்கட்டுலயோ இல்ல, வெளிவிரட்டுலயோ மாடு பிடிச்சுற முடியாது. மூணுக்கும் வெவ்வேறு விதமான பயிற்சி வேணும். மத்த காளைகள் கூட பரவாயில்ல, ஆனா நாட்டு மாடுகளை அடக்குறது அத்தனை சுலபமில்ல. நம்ம ஊர் காளைகள் ரொம்ப அறிவானது. ஒருத்தர விரட்டுற மாதிரி விரட்டி, இன்னொருத்தன குத்திபுடும். களத்துல நிக்குற வீரன் எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். களத்துல இறங்குற எந்த வீரனும் மாட்டை வதைக்க மாட்டான். எங்க கை வைச்சா மாடு எப்புடித் திரும்பும்னு அவனுக்குத் தெரியும்" என்றவரிடம்...

“அண்ணே கமல் சாரைப் பாத்தல அதைச் சொல்லு’’ என ஒருவர் தலையிட மேலும் தொடர்கிறார். “விருமாண்டி படத்துல வர மாடுபுடி சீனுக்கு கமல் சாருக்கு டூப் போட என்னை கூட்டிட்டுப் போனாங்க. ஜல்லிக்கட்டு சீன் மட்டும் ஒரு மாசத்துகிட்ட எடுத்தாங்க. எங்க ஊருல இருந்து 180 பேரு, 200 மாடுகன்னு பெரிய கூட்டமே கிளம்பிப் போனோம். ஷூட்டிங் நடக்குற எல்லா நாளும் கமல் சார் செட்டுக்கு வந்துருவாரு. எல்லார்கிட்டயும் சகஜமா பழகுவாரு. ‘காயம் படாம பாத்து மாடுபிடிங்க'னு எனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்புனாரு. நெப்போலியன் சாரும் அப்படித்தான். எங்க ஊரு பயலுக சுத்தி உக்கார வெச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பாரு.. செட்டே கலகலக்கும்.” என புன்னகைத்தவரிம்... அலங்காநல்லூருக்கும் காளைக்குமான உறவைப் பற்றிக் கேட்டோம், 

“எங்க ஊர்ப்பயலுகளுக்கு காளையைப் பத்தியோ, ஜல்லிக்கட்டைப் பத்தியோ சொல்லித்தரணும்னு அவசியமே இல்ல. எங்க பாட்டன் மாடு புடிச்சான். எங்க தாத்தா புடிச்சாரு, அடுத்து எங்க அப்பா, இப்போ நான் புடிக்கிறேன்..... அடுத்து எம் புள்ள புடிப்பான்.   இந்த ஜல்லிக்கட்டு தலைமுறை தலைமுறையா தொடருற சங்கதி. ரத்துத்துலயே ஊறிப் போன ஒன்னு.  இப்போ ஜல்லிக்கட்டையே நிறுத்திட்டாலும் கோவில் காளை, கிடாய், சேவல்னு இதுக இல்லாம எங்களால இருக்க முடியாது." என்றவரிடம், ஜல்லிக்கட்டு தடை காலத்தைப் பற்றிக் கேட்க சற்று நிதானித்துக் கொண்டு பேச்சைத் தொடர்கிறார்... 

ஜல்லிக்கட்டு

“கடந்த பத்து வருஷங்களாவே ஜல்லிக்கட்டு தடைனு அரச புரசலா சேதிக வந்துகிட்டேதான் இருந்துச்சு. 2015, 2016னு இரண்டு வருஷமும் இனி ஜல்லிக்கட்டு நடத்தவே கூடாதுன்னு நிறுத்தி வெச்சுட்டாங்க. அந்த  நிமிஷம் எனக்குள்ள உண்டான ஆதங்கம் அதிகம். ஆயிரம் வருஷமா கடைபிடிச்ச என் ஊரோட பண்பாடு எவன் தடுக்குறதுங்கிற ஆதங்கம் அது.

அந்த இரண்டு வருஷமும் ஊருக்குள்ள சின்ன சின்ன போராட்டம், உண்ணாவிரதம்னு நடந்துட்டேதான் இருந்துச்சு. கிராமத்தோட பிரச்சனை யாரு வருவாங்கிற கேள்விதான் ஊர்க்காரன் அத்தனை பேர்ட்டயும்....  அப்போ பெரிய அளவில ஜல்லிக்கட்டு  ஏதும்  நடக்கல. ஆனாலும், என் பசங்களுக்கு பயிற்சி கொடுக்கறத நிறுத்தல. சுத்துப்பட்டு ஊர்களைத் திரட்டி, தடையை மீறி ஜல்லிக்கட்டு  நடத்திட்கிட்டேதான் இருந்தோம்.

தொடர்ச்சியா மூணாவது வருஷமும் தடை விதிச்சாய்ங்க. இந்தமுறை போராட்டம் தீவிரமாயிருச்சு. மதுரையோட மூலையில கிடக்குற அலங்காநல்லூருக்கு அமெரிக்காவுல இருக்குற தமிழன் துணையா நின்னான். படிக்குற புள்ளைங்க போராட்டக் களத்துல பட்ட கஷ்டம் கொஞ்சம் நெஞ்சமில்ல, வீட்ட உட்டுட்டு எங்களுக்காக உக்காந்துச்சுங்க. அன்னைக்கு போலீஸ் அடிச்சத எப்பவுமே மறக்க முடியாது. புள்ளைங்கள அடிச்சதுக்கு நியாயம் கேட்டு ஊர் சார்புல கேஸ் போட்டுருக்கோம்.

மாணவர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் கிடைச்ச வெற்றிதான் ஜல்லிக்கட்டு. என் பாரம்பரியத்துக்கு இன்னொரு உசுரு கொடுத்த புரட்சி" என்றவர் குரலில் தழுதழுப்பு.

“சொல்லப்போனா இப்பதான் ஜல்லிக்கட்டு காளைகளை பத்தின விழிப்புஉணர்வு அதிகமாயிருக்கு. தடை போட்ட அப்பறம்தான் காளைகளை அதிகமா வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க. இந்த வருஷ ஜல்லிக்கட்டு களைகட்டும் பாருங்க"  என மீண்டும் களத்திற்கு விரைகிறார்.


டிரெண்டிங் @ விகடன்