வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (06/01/2018)

கடைசி தொடர்பு:22:01 (06/01/2018)

உரிய விலையோடு வாங்க....! கரும்பு வியாபாரிகளைத் திரும்ப அனுப்பும் விவசாயிகள்

பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்தோடு கரும்பு அறுவடையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் லாபகரமான விலை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மை அம்சமாகக் கரும்பு இடம்பெறும். பொங்கல் கரும்பு விற்பனையைக் கருத்தில்கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, திருவோணம், திருக்காட்டுப்பள்ளி, திருவிடை மருதூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பொங்கல் கரும்பு பயிர் செய்தனர். கடுமையான வறட்சி நிலவிய நெருக்கடியான சூழலிலும், மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் பாய்ச்சி, உரங்கள் இட்டு, களையெடுத்து கரும்பை வளர்த்தெடுத்தார்கள்.

தற்பொழுது பொங்கல் நெருங்கும் தருணத்தில் தங்களது நிலத்தில் உள்ள கரும்பை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்முரமாகியுள்ளனர். ஒரு கரும்புக்குக் குறைந்தபட்சம் 15 ரூபாய் விலை கிடைத்தால்தான், தங்களுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும் என்கிறார்கள் இதனைப் பயிரிட்டுள்ள விவசாயிகள். ஆனால் வியாபாரிகளோ ஒரு கரும்புக்கு 10 ரூபாய்தான் விலை தருவோம் என்கிறார்கள். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்களது கரும்பை குறைவான விலைக்குத் தரமாட்டோம் என வியாபாரிகளைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். இன்னும் ஓரிரு நாள்களில் தாங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு வியாபாரிகள் கண்டிப்பாக உடன்படுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொங்கல் கரும்பு விவசாயிகள்.