34 வருட போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை! அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் சத்துணவு ஊழியர்கள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் முன்பு 400-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிறகு கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார்கள்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறுகையில், ''சத்துணவு ஊழியர்களுக்கு, மற்ற துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களைப் போல் முழுநேர சம்பளம் வழங்க வேண்டும் என்று கடந்த 34 வருடமாக போராடி வருகிறோம். இன்னும் எந்த தீர்வும் எட்டவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்களாக பாவித்து அவர்களுக்கு முழு நேர சம்பளம் வழங்கப்படும் என்றார். ஆனால் இன்றுவரை அது செயல்படுத்தவில்லை. இந்த வருட ஊதிய குழுவிலும் நாங்கள் வாங்கும் சம்பளத்தோடு 2.57 சதவீதம் பெருக்கி சம்பளம் வழங்கியுள்ளது.

எங்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எங்களுக்கு முழுமையான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பணிக்கொடை 1 லட்சம் தருகிறார்கள். அதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும். பொங்கலுக்கு முதல்நிலை ஊழியர்களை போல எங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு கடை நிலை ஊழியர்களைப் போல எங்களுக்கும் ஒரு மாதச் சம்பளத்தை பொங்கல் போனஸாக வழங்க வேண்டும்'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!