வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (06/01/2018)

கடைசி தொடர்பு:23:30 (06/01/2018)

ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஜாக்டோ-ஜியோ தொடர் முழக்க போராட்டம்
ராமநாதபுரத்தில் நடந்த இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் பி.சேகர் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் எஸ்.முருகேசன்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஜெ.லியோ ஜெரால்டு எமர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்,சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கக் கோருதல் ,பொங்கல் போனஸாக ஒரு மாத ஊதியம் வழங்கிடக் கோருதல் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த மாநிலம் தழுவிய தொடர் முழக்க போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.