மத்திய அரசு மூலம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு: ராமேஸ்வரம் மீனவர்களிடம் உறுதியளித்த ஓ.பி.எஸ்!

தமிழக மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு மூலம் தீர்வு காண முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருவதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தனுஷ்கோடியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ராமேஸ்வரம்  வந்திருந்தார். இன்று அதிகாலை அக்னிதீர்த்த கடலில் தனது குடும்பத்தினருடன் நீராடிய அவர் பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார். அதைத்தொடர்ந்து தனியார் மண்டபம் ஒன்றில் சுமார் 5 மணி நேரம் நடந்த பிதுர்களுக்கான பூஜை, திலஹோம பூஜை ஆகியவற்றில் பங்கேற்று மீண்டும் தனுஷ்கோடி சென்று நீராடினார்.

ராமேஸ்வரம் கோயிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு 

இந்நிலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ராமேஸ்வரம் அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள் என்.ஜே.போஸ், தேவதாஸ், சேசுராஜ், எமரிட், சகாயம் உள்ளிட்டோர் சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான படகுகளையும் மீட்டு தரக் கோரியும், மீனவர் பிரச்சனைக்கு தற்காலிகத் தீர்வாக பாம்பன் குந்துகால் பகுதியில் தற்காலிக துறைமுகம் அமைத்து தரக் கோரியும் மனு அளித்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம் ''மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். அவரது வழியில், முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய அரசு மூலம் மீனவர் பிரச்னைகள் தீர நடவடிக்கை எடுத்து வருகிறார். கச்சதீவைப் பொறுத்தமட்டில், அது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்து வந்தது. அதனடிப்படையில்தான் கச்சத்தீவை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் வருவாய்த்துறையையும், முதல்வராக இருந்த ஜெயலலிதா இணைத்துக்கொண்டார். எனவே கச்சத்தீவு பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றார். 

இதன்பின்னர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சுவாமி-அம்பாள் சன்னிதிகளில் தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தை திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி வரவேற்றார். துணைமுதல்வருடன் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு ) முத்துமாரி, காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, கோட்டாட்சியர் பேபி,  அ.தி.மு.க மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!