வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:01:00 (07/01/2018)

மதுரை விமானநிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை சூட்டக்கோரி  உண்ணாவிரத போராட்டம்! டாக்டர் கிருஷ்ணசாமி முடிவு


புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் . அவர் சமூகப்போராளி மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்றவர். அவரது பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டக் கோரி   மத்திய மாநில அரசை வலியுறுத்தி எனது தலைமையில் வரும் 20-ம் தேதி மதுரையில் உண்ணாவிரத போராட்டம்  நடைபெற  உள்ளது .

இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து எனது கட்சித்தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சுப்பிரமணிய சாமி தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறார். அவரது கருத்தினை மத்திய அரசு ஏற்கக் கூடாது .போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தொழிலாளர்களின் 7,000 கோடி பணத்தை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவது முறையற்ற செயல். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால் புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென போராடவில்லை எனவே நீதிமன்றம் போக்குவரத்து துறையை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்ததில் குளறுபடிகள் அதிகம் இருக்கிறது. அதில் நடவடிக்கைகள் தேவை" என்றார்.