20 நாட்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தும் விவசாயிகள்! - வேதாரண்யம் வேதனை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவிலுள்ள கத்திரிப்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், தகட்டூர், பஞ்சநதிக்குளம் ஆகிய இடங்களிலுள்ள வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் முன்பு 2016-2017ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பஞ்சநதிக்குளம், மருதூர் பகுதி போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள போராட்டக்களம் சூடாகியிருக்கிறது.  கத்திரிப்புலத்தில் இருபதாவது நாளாகவும், தகட்டூரில் பன்னிரெண்டாவது நாளாகவும், மருதூரில் ஒன்பதாவது நாளாகவும் விவசாயிகள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தியும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டிய அதிகாரிகளோ, அரசுத்தரப்போ இதுவரை கண்டுகொள்ளவில்லை.  

கத்திரிப்புலத்தில் விவசாயிகள் நேற்று முன்தினம் தலையில் முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று மடியேந்தி அரசிடம் பிச்சை கேட்பதுபோல் போராட்டம் நடத்தினர்.  பயிர்க் காப்பீடுத் தொகை வழங்குவதில் பெரியளவில் குளறுபடியும், முறைகேடும் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  ஒரே பகுதியில், ஒரே நேரத்தில் செய்யப்பட்ட சாகுபடிக்கு சில ஊர்களுக்கு 25 சதவிகிதமும், சில ஊர்களுக்கு 100 சதவிகிதமும் பாரபட்சமாக பயிர்க்காப்பீடு வழங்கப்படுவதாகவும், ஆளும் கட்சியினர் துணையோடு கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் விவசாயிகள் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது. இப்போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!