வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:03:00 (07/01/2018)

’போக்குவரத்துத் துறை வேலை நிறுத்தத்துக்கு முழு ஆதரவு’ - சுப.உதயகுமாரன் அறிவிப்பு!

தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு பச்சைத் தமிழகம் முழு ஆதரவு அளிப்பதாக சுப.உதயகுமாரன் அறிவித்து இருக்கிறார். இந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். 

சுப.உதயகுமாரன்

ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனபது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளது. 

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பச்சைத் தமிழகம் கட்சியும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தாறுமாறான சாலைகளில் தரமற்ற வாகனங்களை இயக்கி, உயிரையே பணயம் வைத்து வேலை செய்கிறவர்கள் போக்குவரத்து ஊழியர்கள். அவர்களுக்கு போதிய சம்பளம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது, பணி நிறைவின்போது பலன்கள் ஏதும் கிடையாது, ஆனால் பொறுப்புகள் மட்டும் ஏராளமாக உள்ளன. 

பயணிகளின் பாதுகாப்பு, வாகனங்களின் பராமரிப்பு, எந்தச் சூழ்நிலையிலும் வேலையிலிருந்து வீட்டுக்குப் போக முடியாத நிலை என மிகப் பெரும் நெருக்கடிகளுக்குள் வேலை செய்கிற போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்களை வாழ்த்தி வணங்காவிட்டலும் பரவாயில்லை, தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள். செய்யாத வேலைக்கு சம்பளமும், கிம்பளமும் வாங்கும் சொகுசுப் பணியாளர்கள் இவர்களை கண்டிப்பதில் அர்த்தமே இல்லை.

எப்போதும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பயணித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டில், போக்குவரத்து ஊழியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீதி பாதியும், மீதி பாதியுமாக உள்ளவர்களை விட, அரசியல் வியாதிகளைவிடவும் இவர்கள் முக்கியமானவர்கள். ஊரை அடித்து உலையில் போடுகிறவர்களுக்கு ஒரு லட்சம் மாதச் சம்பளம் என்றால், உங்களுக்கு போதிய ஊதியம் தந்தாக வேண்டும். உரிய பலன்கள் தந்தாக வேண்டும். உரிமைப் போராட்டத்தில் உறுதியாக இருங்கள் தோழர்களே, துவண்டு விடாதீர்கள்’’ என்று சுப.உதயகுமாரன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.