வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:06:00 (07/01/2018)

பொங்கல் கொண்டாட்டம்! விவசாயிகளின் உற்சாகத்தை குறைக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

பொங்கல் கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகளோ உற்சாகம் குறைந்து காணப்படுகிறார்கள். காரணம் மேட்டூர் அனையின் குறைவான நீர்மட்டம். காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இனிவரும் நாள்களில் தங்களது நெற்பயிர்களை காப்பாற்ற போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வியுடன் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

கடந்த ஆண்டு கடும் வறட்சியின் காரணமாக சம்பா நெற்பயிர்களை இழந்து விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார்கள். இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியும் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தார்கள். ஆனாலும் கூட பருவமழை சற்று தாமதமாக பெய்ததால் அக்டோபர் 2-ம் தேதி தான் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ”

அப்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தது. தொடர்ச்சியாக மழையும் பெய்ததால் பயிர் காலம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் விவசாயிகள். ஆனால் கர்நாடகாவிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் வராததால் தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியில் உள்ளது. மழையும் இல்லை. சம்பா நெற்பயிர்கள் முழுமையாக முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக, இன்னும் சில வாரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளார்கள்.