தாமிரபரணியை காக்க களமிறங்கிய மாணவர் படை!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி மூன்றாம் கட்டமாக நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தன்னார்வலர்களும் இந்தப் பணியில் பங்கேற்றனர்.

தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணி

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படும் தாமிரபரணி ஆறு, தமிழக எல்லையிலேயே தொடங்கி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது. அதனால் பிற மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்னை ஏதுமற்றதாக இந்த ஆறு உள்ளது. ஆனாலும், தாமிரபரணி ஆறு தொடர்ந்து மாசடைந்து வருகிறது. ஆற்றின் உள்ளே குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற நிலைக்கு மாறி வருகிறது. 

அதனால் தாமிரபரணி ஆற்றின் சுத்தத்தை பராமரிக்கும் வகையிலும் ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இரண்டு கட்டங்களாகச் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. காவல்துறையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரைக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெற்றன. 

இந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாமிரபரணி புஷ்கரணி நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதையொட்டி ஆற்றை 3-வது கட்டமாக சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தாமிரபரணி படித்துறை பகுதியில் ஆற்றங்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. தருமபதி அறக்கட்டளை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அரசுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் சேர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!