அனுபவமில்லாத டிரைவர்கள்- உயிரோடு விளையாடும் போக்குவரத்துத்துறை! திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் முடங்கியது திருச்சி. இந்நிலையில் திருச்சி அருகே பள்ளி பேருந்து ஓட்டுநர் ஓட்டிச் சென்ற  அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசு பேருந்துபோக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் திருச்சி மாவட்டத்தில் உள்ள 18 பணிமனைகளில் பேருந்துகள் முடங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி பேருந்துகள், கனரக வாகங்கள் என பல்வேறு வாகனங்களை ஓட்டிய டிரைவர்களை பிடித்துவந்து அரசு பேருந்துகளை இயக்க வைக்கின்றனர். அப்படித் தேர்வு செய்யப்பட்ட புதிய ஓட்டுநர்களுக்கு அனுபவம் குறைவு என்பதால், இவர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்குவது ஆபத்தில் முடியும் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

சில இடங்களில் அரசு பேருந்துகளை இயக்கிய தற்காலிக டிரைவர்களுக்கு கிளம்பிய எதிர்ப்பால், பேருந்துகள் மீண்டும் முடங்கின. வழக்கமாக அரசு போக்குவரத்து கழக டிரைவர், மற்றும் கண்டக்டர்கள் 240 கி.மீ தூரம் ஓட்டினால்தான் ஒருநாள் பணியாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால் தற்போது 20 கி.மீ வரை ஓட்டினாலே ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகப் போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசு பேருந்தை பள்ளி பேருந்து டிரைவர் ஓட்டிச் சென்றபோது கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூரை அடுத்த சூரியூர் எனும் கிராமத்துக்கு அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் என்பவரைக் கொண்டு பேருந்தை இயக்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆறுமுகம் ஓட்டிவந்த பேருந்து, திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதுவதுபோல் ஆறுமுகம் பேருந்தை ஓட்டியுள்ளார். மேலும் திருவெறும்பூர் தி-நகர் அருகே பேருந்து வந்தபோது, அதற்கு முன்பாக அந்த இடத்தில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிக்கொண்டிருந்தது. அந்தத் தனியார் பேருந்தை முந்திச்செல்ல ஆறுமுகம் முயன்றபோது, பேருந்து தனியார் பேருந்து மீதும், சாலையில் சென்ற கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து சத்தமாக கூச்சலிடட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் பலர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். அரசு பேருந்தை ஓட்டிய ஆறுமுகம், தான் பள்ளி பேருந்து ஓட்டி வருவதாகவும், தன்னை திருவெறும்பூர் பகுதியின் ஆர்டிஓ கட்டாயப்படுத்தி பேருந்தை ஓட்டச் சொன்னதாகவும், தனக்கு அந்தப் பேருந்தின் கன்டிஸன் தெரியவில்லை என்றும், அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்தை அனுபவமில்லாத ஓட்டுநரைக்கொண்டு இயக்கியதால் ஏற்பட்டுள்ள இந்த விபத்து திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!