வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:04:00 (07/01/2018)

ஆர்.கே. நகர் தொகுதியில் கமல் ஏன் போட்டியிடவில்லை?- தினகரன் கேள்வி

Dinakaran press meet in thoothukudi

தனது அணியைச் சேர்ந்த நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சி மற்றும் தீபா பேரவையிலிருந்து விலகி தனது அணியில் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தூத்துக்குடிக்கு வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்துப் பேசாமல்,  நீதிமன்றத் தீர்ப்பை காரணமாகக் காட்டி போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கிறது தமிழக அரசு. கட்சியில் இருப்பவர்களை தக்க வைக்க முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆணவப் போக்கு அவர்களுக்கே நல்லதல்ல.

கமல்ஹாசன் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என இதுநாள் வரை நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், “நான் அரசியலுக்கு வருவேன்.. வந்துவிட்டேன்..” என டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் அவர்,  ஏன் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கவில்லை. கமல் என் மீது அவதூறு கருத்து கூறியதால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்ற எண்ணம் ஏதும் எனக்கு இல்லை.  தான் ஒரு பாப்புலர் நடிகர் என்பதைக் காட்டி அரசியல் தெரியாமல் அரசியலில் சடுகுடு ஆட நினைக்கிறார்.

ஆளுநர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்வது சட்டத்திற்கு  புறம்பானது. அண்ணா வழி வந்த ஆட்சி நடக்கும் மாநிலம் தமிழகம். ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் பதவி என்பதே தேவையில்லை என அண்ணா முன்பே கருத்து சொல்லியிருக்கிறார். ரஜினி கட்சி ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம், அரசியலிலும் நிற்கலாம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்யவிடாமல் அரசாணை வெளியிட்டுள்ளது அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்வரை ஆதாயம் பெறுவதற்காகத்தான்.

வரும் 8-ம் தேதி சட்டசபைக்கு செல்கிறேன். என்னை எந்த வரிசையில் உட்கார வைப்பார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். சபாநாயகர் அனுமதித்தால் எனது தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் பிரச்னை, கூடங்குளம் அணுஉலைப் பிரச்னைகள் குறித்து பேசுவேன். முதலில் பேச அனுமதிக்கிறார்களா என்பதைப் பார்ப்போம். அனுமதி தராவிட்டால் அடுத்த கூட்டத்தில் அனுமதிக்காக காத்திருப்பேன்.  எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவர் செங்கோட்டையன். ஆனால், அவரை ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஏன் கட்சியில் ஒதுக்கிறார்கள்  எனத் தெரியவில்லை. அவரை கட்சியில் ஒதுக்குவது எனக்கு வேதனை அளிக்கிறது“ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க