வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:07:00 (07/01/2018)

தமிழகத்தின் 12 மாநகராட்சிகளிலும் ஜெயலலிதா சிலை! எடப்பாடி பழனிசாமியின் அடுத்த அரசியல் ஸ்டண்ட்

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவிக்க உள்ளார்.

ஜெயலலிதா சிலை

முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க-வின் நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழகம் முழுவதும் ஓராண்டு காலமாக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள இந்த விழா பேருதவியாக அமைந்தது. 

அ.தி.மு.க-வையும் இரட்டை இலை சின்னத்தையும் வைத்திருந்த போதிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் அணியினரால் டி.டி.வி.தினகரனை ஜெயிக்க முடியவில்லை. இடைத் தேர்தலில் கோட்டை விட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க-வினரிடம் டி.டி.வி.தினகரனுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது. ஆட்சி எடப்பாடியிடம் இருந்தபோதிலும், கட்சியை வழிநடத்தும் தகுதி தினகரனுக்கு மட்டுமே இருக்கிறது என்கிற நம்பிக்கை அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களுக்கு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. 

அதனால் தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவைச் சரிசெய்யும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி தரப்பினர் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இழந்த செல்வாக்கை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும்போது, 110-வது  விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்தின் 12 மாநகராட்சிகளிலும் ஜெயலலிதாவின் சிலையைத் திறக்க முடிவு செய்யப்படும். இதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களிலும் சிலை திறப்பு விழாக்கள் நடக்கும் எனகிறார்கள், விவரம் அறிந்தவர்கள். முதல் சிலையை, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி திறக்க திட்டமிட்டு உள்ளனர்.  

இதற்காக 12 மாநகராட்சிகள் அமைந்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் இடம் தேர்வு செய்யுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள், உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைப்படி உரிய இடத்தை பரிசீலித்து வருகிறார்கள். சிலை செய்வதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. 12 சிலைகளையும் ஒரே சமயத்தில் திறப்பதா? அல்லது ஒவ்வொரு சிலையையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறந்து வைத்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சிலை அமைக்கப்படுவது மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர். மொத்தத்தில் தமிழகத்தில் சிலை அரசியலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.