வெளியிடப்பட்ட நேரம்: 03:40 (07/01/2018)

கடைசி தொடர்பு:03:44 (07/01/2018)

“என்னா விடுவமா நாங்க...!” போலீஸுக்கு சவால் விட்டு மாட்டிக்கொண்ட இளைஞர்

பீட்டர்

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் புத்தாண்டு இரவில் இருசக்கரவாகனத்தில் வேகமாகச் சென்றபடி இளைஞர்கள் போலீஸ் தடுப்பிற்காக பயன்படுத்தும் பேரிகார்டுகளை சாலையில் தீப்பொறி பறக்க இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவின. முன்னால் அமர்ந்திருக்கும் இளைஞர் இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் அமர்ந்திருப்பவர் ஆபத்தான முறையில் பேரிகார்டை சாலையில் உரசியபடி இழுத்துச் செல்கிறார்.  

இந்த வீடியோ காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார் சம்பந்தப்பட்ட இளைஞர்களைத் தேடி வந்தார்கள். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், 'தவளை தன் வாயால் கெடும்' என்பது போல அதில் ஒரு இளைஞர் தன் வாயாலேயே போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அந்த இளைஞரின் பெயர் பீட்டர். 

சாலையில் தன் வீரதீர பராக்கிரமங்களை தானே பேசி பறைசாற்றும் வீடியோ ஒன்றை பீட்டர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தான் போலீஸாருக்கு பொறியாக கிடைத்தது.

தான் வெளியிட்ட வீடியோவில் பீட்டர்  பேசியிருப்பதாவது:
“அந்த டிவைடரை புட்சிக்கினு தேச்சிக்கினே வரோம் ரோட்ல. நெருப்பு பறக்குது டிவைட்ரலருந்து. அதே மாதிரி தான் நிறைய கோளாறு. போலீஸ்காரங்க புட்சாங்கோ வண்டிய. இந்த சாந்தோம் கிட்டலாம் பயங்கரமா சிக்கோம் ஆச்சி. போலீஸ்லாம் வண்டிய புட்சி, வண்டில என்னா சவுண்டு கேக்குது... டபடபனு..பரபரபரனு என்னாத்துக்கு இந்த மாரி சவுண்ட்லாம் போட்னுருக்கன்னான். வண்டிய புட்சான். காலைல தான் தருவேன்னான். “என்னா நீ வண்டிய புடிப்ப, அப்டினு சொல்லிக்கினு..என்னா வுடுவமா நாங்க”... அந்த வெறி என்னா பண்ணும். அவன் போட்ருந்தான்... டிவைடர்லாம் போட்ருந்தான் ரோட்லயே. அந்த டிவைடரை புட்சினு தேச்சினே வர்றோம் ரோட்ல. ஒட்சிட்டோம், அட்சி எதிக்கவே. போலீஸ்காரன் அங்கயிருந்து ஆ..னு பாக்குறான். டிராபிக் போலீஸு. என்னாடா இவனுங்க இப்படி அக்கிரமம் பண்றானுங்க.. ஏ ..ஏ...னு கத்தினான். ஏயா...ஹ.. அவ்ளோ தான் உன்க்கு.. அப்டினு டிவைடரை தூக்கி அடிக்கிறோம். ஒட்ச்சிட்டோம். எல்லாத்தையும் அட்சி ஒட்சிக்கினு....
இப்படியாக அந்த வீடியோ செல்கிறது. 

பீட்டர் இப்போது போலீஸ் கஸ்டடியில். அவருடைய நண்பர்களையும் போலீஸ் தேடி வருகிறது.