வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (07/01/2018)

கடைசி தொடர்பு:08:36 (07/01/2018)

4வது நாளாக தொடரும் போராட்டம்! - போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மட்டும் 100% பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் நான்காவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் குறைவான அளவே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். 

bus strike

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிடில், பணி நிக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை  முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பலதரப்பினரிடம் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இன்று காலை நிலவரப்படி சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து 30% சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சியில் 35% பேருந்துகள் இயக்கப்படுகிறதாம். போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க